தாமதமாக வந்த திமுக எம்.எல்.ஏ மயக்கமடைந்த கர்ப்பிணி

எழுத்தின் அளவு: அ+ அ-

கொடைக்கானலில், நடைபெற்ற சமூக வளைகாப்பு நிகழ்ச்சிக்கு திமுக எம்.எல்.ஏ. தாமதமாக வந்ததால், பல மணி நேரமாக காத்திருந்த கர்ப்பிணிப் பெண் ஒருவர் மயக்கம் அடைந்தார். குறுகிய இடத்தில் பல மணி நேரம் காத்திருந்ததாலேயே கர்ப்பிணி மயக்கமடைந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

வளைகாப்பு நிகழ்ச்சியில் வெகு நேரம் காக்க வைக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண் மயக்கமடைந்த காட்சிகள்தான் இவை...

கர்ப்பிணிப் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தமிழகத்தில் சமூக வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. 

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் பெண்களுக்கு, கர்ப்ப காலத்தில் எடுக்க வேண்டிய கவனிப்பு, இரும்புச் சத்து மாத்திரைகளைத் தவறாமல் உட்கொள்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. 

இதேபோல் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பேருந்து நிலையம் அருகே தனியார் விடுதியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில், சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கொடைக்கானல் மலை கிராமங்களில் இருந்து ஏராளமான கர்ப்பிணிப் பெண்கள் வரவழைக்கப்பட்டனர்.

இந்த நிகழ்ச்சிக்கு தாமதமாக வருகை புரிந்த, பழனி திமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து உரையாற்றி கொண்டிருந்தார்.

அவர் வருகைக்கு தாமதமானதாலும், அதிகாரிகளின் அலட்சியத்தாலும் கர்ப்பிணிப் பெண்கள் வெகுநேரம் காக்க வைக்கப்பட்டனர். 

இதனால் சோர்வடைந்த கர்ப்பிணி பெண் ஒருவர் திடீரென மயக்கமடைந்ததால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 

இதனை கண்ட கூட்டத்தில் பங்கேற்ற சக கர்ப்பிணிப் பெண்கள், மயக்கமடைந்த கர்ப்பிணிக்கு குடிநீர் வழங்கி, செவிலியர்களின் உதவியுடன் கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

குறுகலான இடத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களை வெகுநேரம் காக்க வைத்ததாலேயே, கர்ப்பிணி பெண் உடல் சோர்வடைந்து மயக்கமடைந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Night
Day