தமிழகம் முழுவதும் இன்று குரூப்-4 தேர்வு - 13 லட்சத்து 89 ஆயிரம் பேர் எழுதுகின்றனர்

எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுக்கான குரூப் 4 தேர்வு இன்று தொடங்கி உள்ளது.

பல்வேறு அரசுத் துறைகளில் குரூப் 4 பணிகளில் காலியாக உள்ள 3 ஆயிரத்து 935 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த ஏப்ரல் மாதம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி இத்தேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வர்களுக்கு கொள்குறி வகை முறையில் இன்று தேர்வு தொடங்கி உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 4 ஆயிரத்து 922 தேர்வு மையங்களில் 13 லட்சத்து 89 ஆயிரத்து 738 விண்ணப்பதாரர்கள் தேர்வெழுதுகின்றனர். தேர்வை கண்காணிக்கும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் துணை ஆட்சியர் நிலையில் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 104 தேர்வு மையங்களில் 29 ஆயிரத்து 129 பேர் தேர்வு எழுதுகின்றனர். இதற்காக 29 நடமாடும் குழுக்களும் 11 கண்காணிப்பு குழுக்களும் தேர்வு நடைபெறுவதை கண்காணிக்க அமைக்கப்பட்டுள்ளது. தேர்வு மையங்கள் முழுவதும் முழுமையாக வீடியோ பதிவு செய்யப்படுகிறது. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தேர்வு நடைபெறுகிறது.

சேலம் மாவட்டத்தில் குரூப் 4 தேர்வுகள் 217 தேர்வு மையங்களில் நடைபெற்று வருகிறது. 76 ஆயிரத்து 999 பேர் தேர்[t எழுதுகின்றனர். கண்காணிப்பாளர்கள், முதன்மை கண்காணிப்பாளர்கள் மற்றும் நடமாடும் கண்காணிப்பாளர் குழுக்கள் தேர்வை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நெல்லையில் குரூப் 4 தேர்வுகள் 108 இடங்களில் 132 மையங்களில் 36 ஆயிரத்து 11 பேர் தேர்வை எழுதுகின்றனர்.11 பறக்கும் படை அலுவலர்களும், 11 பறக்கும் படைகளும் இணைந்து தேர்வுக்குரிய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுரை மாவட்டத்தில் 265 தேர்வு மையங்களில் 73 ஆயிரத்து 826 தேர்வர்கள் TNPSC GROUP- 4 தேர்வை எழுதுகின்றனர். துணை வட்டாட்சியர் நிலை அலுவலர் தலைமையில் 72  நகரும் குழுக்களும்,  துணை ஆட்சியர்கள் தலைமையில் 11 பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்தார். 

குரூப் 4 தேர்வு முடிவுகள் 3 மாதத்தில் வெளியிடப்படும் என டி.என்.பி.எஸ்.சி தலைவர் பிரபாகர் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் நாட்களில் நாட்களில் 10 ஆயிரம் காலி பணியிடங்களுக்கு தேர்வு நடைபெறும் என குறிப்பிட்டார். குரூப் 4 தேர்வு வினாத்தாள் எதுவும் கசியவில்லை எனவும், குரூப் 4 தேர்வு வினாத்தாள், பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 


Night
Day