எழுத்தின் அளவு: அ+ அ- அ
தவறான ஊசி செலுத்தப்பட்டதால் சிறுவன் உயிரிழந்ததாக குற்றம்சாட்டி உறவினர்கள், நெல்லை அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தென்காசி மாவட்டம் மலைப்பட்டி பகுதியை சேர்ந்த மகேந்திரன் என்பவரின் 4 வயது மகன் பொன் மாறனுக்கு கழுத்துப் பகுதியில் சிறிய கட்டி இருந்துள்ளது. இதனால் சிறுவனை நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அப்போது ஸ்கேன் எடுக்க செல்வதாக சிறுவனை கூட்டிச்சென்ற பணியாளர்கள், ஸ்கேன் எடுக்கும் அறையில் வைத்து சிறுவனுக்கு ஊசி போட்டதாக கூறப்படுகிறது. பின்னர், சிறிது நேரத்திலேயே சிறுவன் பொன்மாறன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள், தவறான சிகிச்சையால் சிறுவன் உயிரிழந்ததாகவும், சிறுவனின் இறப்பை மருத்துவர்கள் மூடி மறைத்ததாகவும் குற்றம்சாட்டி, மருத்துவமனையை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மருத்துவமனை நிர்வாகத்துக்கு ஆதரவாக போலீசார் செயல்படுவதாக குற்றம்சாட்டியுள்ள உறவினர்கள், சிறுவனுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மற்றும் லேப் டெக்னீசியன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சிறுவனின் இறப்பிற்கு நீதி கிடைக்கும் வரை உடலை வாங்கப் போவதில்லை என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.