எழுத்தின் அளவு: அ+ அ- அ
சென்னையில் பிரபல போத்தீஸ் ஜவுளி நிறுவன உரிமையாளர் மற்றும் மகன்களின் வீடுகளிலும், மதுரை, நெல்லை, கோவை, திருச்சி உள்ளிட்ட இடங்களில் போத்தீஸ் ஜவுளி கடைகளிலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
பிரபலமான ஜவுளிக் கடை போத்தீஸ், தமிழ்நாடு முழுவதும் பல்வேறு கிளைகளைக் கொண்டுள்ளது. இந்நிலையில், சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரையில் உள்ள போத்தீஸ் ஜவுளி கடை உரிமையாளரின் இரு மகன்களான போத்தி ராஜா மற்றும் அசோக் ஆகியோரின் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. 12 பேர் கொண்ட அதிகாரிகள் இரு குழுக்களாக காலை 7.20 மணி முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை ஆர் ஏ புரம் கிரெசென்ட் தெருவில் உள்ள போத்தீஸ் ஜவுளி கடை உரிமையாளர்களின் ஒருவரான ரமேஷ் வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. தியாகராய நகர், ஜிஎன் செட்டி சாலை உள்ள போத்தீஸ் ஜவுளி கடைகளிலும் வருமான வரி சோதனை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
நெல்லை டவுன் வடக்கு ரதவீதி பகுதியில் அமைந்துள்ள போத்தீஸ் ஜவுளிக் கடையின் 2 கிளைகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அந்நிறுவனத்திற்கு சொந்தமான வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை கடை, போத்தீஸ் சொர்ண மஹால் தங்க கடை மற்றும் வண்ணாரப்பேட்டையில் உள்ள போத்தீஸ் உரிமையாளரின் வீடு, போத்தீஸ் சூப்பர் மார்க்கெட் மற்றும் வடக்கு ரத வீதியில் உள்ள போத்தீஸ் ஜவுளி கடை குடோன் உள்பட நெல்லையில் ஏழு இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது. 30க்கும் மேற்பட்ட வருமான வரித்துறையினர் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்
வரி ஏய்ப்பு புகார்கள் தொடர்பாக இந்தச் சோதனைகள் நடத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இந்த சோதனைகளில் ஏராளமான ஆவணங்கள், கணக்கு புத்தகங்கள் மற்றும் மின்னணு சாதனங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், முக்கிய தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
மதுரை மேலமாசி வீதியில் உள்ள போத்தீஸ் ஜவுளி விற்பனை நிலையத்தில் 10க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் காலை 7.30 மணியில் இருந்து சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த நிதியாண்டில் நடைபெற்ற விற்பனை மற்றும் பொருட்கள் வாங்கப்பட்டது தொடர்பான ஆவணங்கள், வருமானவரி தாக்கல்தொடர்பான ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். வருமான வரித்துறை சோதனை காரணமாக போத்தீஸ் நிறுவனத்தின் கதவுகள் அடைக்கப்பட்டு ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வருமான வரித்துறையினரின் சோதனையில் பல்வேறு ஆவணங்களை கைப்பற்றி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது,
திருச்சி தெப்பக்குளம் பகுதியில் உள்ள போத்தீஸ் ஜவுளி நிறுவனத்திலும், என் எஸ் பி சாலையில் உள்ள போத்தீஸ் ஸ்வர்ண மஹால் நகைக்கடையிலும் 10க்கும் மேற்பட்ட வருமான வரி துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.