எழுத்தின் அளவு: அ+ அ- அ
நாட்டின் 15வது குடியரசு துணை தலைவராக தமிழகத்தை சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன் பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
ஜெகதீப் தன்கர் ராஜினாமாவைத் தொடர்ந்து, காலியான குடியரசுத் துணை தலைவர் பதவிக்கு கடந்த 9ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தமிழகத்தை சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணனும், இந்தியா கூட்டணி சார்பில் தெலங்கானாவை சேர்ந்த உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்ஷன் ரெட்டியும் போட்டியிட்டனர். இதில், 452 வாக்குகள் பெற்று சி.பி. ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார். எதிர்த்துப் போட்டியிட்ட சுதர்ஷன் ரெட்டிக்கு 300 வாக்குகள் கிடைத்தன.
குடியரசு துணை தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று பதவியேற்றுக் கொண்டார். டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். குடியரசு துணை தலைவராக பதவியேற்ற சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்து தெரிவித்தார்.
குடியரசு துணை தலைவராக பதவியேற்றதன் மூலம் இந்த பதவியை அலங்கரித்த 3வது தமிழர் என்ற பெருமையை சி.பி. ராதாகிருஷ்ணன் பெற்றுள்ளார். பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், முன்னாள் துணை குடியரசு தலைவர்கள் வெங்கையா நாயுடு, ஹமீத் அன்சாரி, குடியரசு தலைவர் பதவியை ராஜினாமா செய்த ஜெகதீப் தன்கர், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பல்வேறு மாநில ஆளுநர்கள் மற்றும் முதலமைச்சர்கள், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாய், உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி பதவியேற்பு விழாவில் பங்கேற்கவில்லை.