எழுத்தின் அளவு: அ+ அ- அ
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியின் காரை மறித்து மாற்றுத்திறனாளி முதியவர் ஒருவர் சரமாரியாக கேள்வி எழுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பேருந்து நிலையத்தில் புதிய பேருந்து வழித்தட தொடக்க விழா நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்ற திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி நிகழ்ச்சி முடிந்து மற்றொரு நிகழ்ச்சிக்கு காரில் புறப்பட முற்பட்டார். அப்போது திமுக தொண்டரான மாற்றுத்திறனாளி முதியவர் ஒருவர் கனிமொழியின் காரை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
சொந்த கட்சியை சேர்ந்தவர்களுக்கு ஒன்றும் செய்யாத இந்த திமுக அரசு தமிழக மக்களுக்கு என்ன செய்யப்போகிறது? என கனிமொழியிடம் முதியவர் ஆவேசமாக கேள்வி எழுப்பினார். மேலும் காரின் பின் இருக்கையில் இருந்த அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரனை சுட்டிக்காட்டி, மாற்றுக்கட்சியில் இருந்து வந்த இவர், கட்சியில் இருக்கும் வரை திமுக விளங்காது என்றும், இவர் கட்சியை அழித்துவிடுவார் என்றும் கூறியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
சொந்த கட்சியின் அவலங்களை பட்டியலிட்ட முதியவரை காவல் துணைக் கண்காணிப்பாளர் பிடித்து இழுத்து அப்புறப்படுத்த முயன்றார். மேலும் அங்கிருந்த திமுக நிர்வாகி ஒருவர் எச்சரித்தும் அதனை எல்லாம் பொருட்படுத்தாமல் அந்த முதியவர் விடாப்பிடியாக கனிமொழியின் கார் கதவை பிடித்துக்கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். திமுக தொண்டர் ஒருவரே அமைச்சரின் செயல்பாடு சரியில்லை என கூறியது சங்கரன்கோவில் பேருந்து நிலைய பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.