எழுத்தின் அளவு: அ+ அ- அ
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை தொடர்ந்து பெய்து வருவதால், அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
தேனி மாவட்டம் சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடைவிதித்து வனத்துறை அறிவித்துள்ளது. சுருளி அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளாக அரிசிப்பாரை, ஈத்தக்காடு உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் நீர்வரத்து அதிகரித்து அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. அருவியில் பாதுகாப்பு தடுப்புகளை தாண்டி தண்ணீர் கொட்டுவதாலும், சுற்றுலாப் பயணிகள் நடந்து சென்று வரும் படிக்கட்டுகளிலும் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவதாலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் அருவிகளில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக குற்றலா அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மெயின் அருவி, பழைய குற்றால அருவி, ஐந்தருவி உள்ளட்ட அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால் வார இறுதியையொட்டி குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.