வீட்டுப் பணிப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் முன்னாள் எம்பி-யுமான பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதியின் முன்னாள் எம்பியுமான பிரஜ்வல் ரேவண்ணா, பாலியல் துன்புறுத்தல் அளித்தது தொடர்பாக 2 ஆயிரத்து 976 ஆபாச வீடியோக்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வீடியோ வெளியானதைத் தொடர்ந்து பிரஜ்வல் ரேவண்ணா மீது வீட்டு பணிப்பெண் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட பெண்கள் கொடுத்த புகாரின் பேரில் 5 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதையடுத்து ஜெர்மனிக்கு தப்பிச் சென்ற பிரஜ்வல் ரேவண்ணா, கடந்த ஆண்டு மே மாதம் 31ம் தேதி நாடு திரும்பிய போது கைது செய்யப்பட்டு, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்
வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில், மைசூரு கே.ஆர். நகரைச் சேர்ந்த 48 வயதான வீட்டுப் பணிப் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக வழக்கை விசாரித்த பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றம் பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என நேற்று தீர்ப்பளித்தது. தண்டனை விவரங்கள் சனிக்கிழமை அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தீர்ப்பை கேள்விப்பட்டு நீதிமன்ற அறையை விட்டு வெளியேறும்போது பிரஜ்வல் ரேவண்ணா கண்ணீர் விட்டு அழுதார்.
இதைத் தொடர்ந்து இன்று காலை நீதிமன்றத்தில் ஆஜரான பிரஜ்வல் ரேவண்ணா, தண்டனை விவரங்கள் தொடர்பான விவாதத்தின் போது, தனக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்குமாறு கூறி கதறி அழுதார். விவாதங்கள் முடிந்த நிலையில் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கான தண்டனை விவரம் அறிவக்கப்பட்டது. அதில் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனையும் 11 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. வழக்குப் பதிவு செய்யப்பட்டு 14 மாதங்களில், நீதிமன்றத்தில் விசாரணை துவங்கி 8 வாரங்களில் தண்டனை வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.