எழுத்தின் அளவு: அ+ அ- அ
தமிழகத்தில் வரும் 5-ம் தேதி ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று பரவலாக கனமழை பெய்தது. குறிப்பாக கடலுார் மாவட்டத்தில் கன மழை கொட்டியது. மயிலாடுதுறை, தஞ்சை, விழுப்புரம், சிவகங்கை மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்துள்ளது. காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வானமாதேவியில் 113 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
நாளை மற்றும் நாளை மறுதினம் 2 நாட்கள் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த இரு நாட்களும் 12 சென்டி மீட்டர் முதல் 20 சென்டி மீட்டர் வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதால் ஆரஞ்சு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது
வரும் 5ம் தேதி ஓரிரு இடங்களில் 21 சென்டி மீட்டருக்கும் மேலாக அதி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் அன்றைய தினம் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், வரும் 6, 7, 8 ஆகிய நாட்களில் மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 5 நாட்கள் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த தரைக்காற்று வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.