தங்கும் விடுதிகளில் கட்டண கொள்ளை... கொடைக்கானலில் புலம்பும் சுற்றுலா பயணிகள்..!

எழுத்தின் அளவு: அ+ அ-

கொதிக்கும் வெயிலுக்கு கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளிடம், தங்கும் விடுதிகளில் அடாவடியாக அதிக கட்டணம் வசூலிப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கட்டண கொள்ளையில் ஈடுபடும் 'கறார்' விடுதிகள் குறித்து விவரிக்கிறது, இந்த செய்தி தொகுப்பு...
 
நாடு முழுவதும் கோடை வெயில் கொளுத்திவரும் சூழலில், குளிர்ந்த சீதோஷண நிலை நிலவும் கோடைவாசஸ்தலங்களை நோக்கி மக்கள் படையெடுத்து வருகின்றனர். குறிப்பாக தமிழகத்தில் மலைகளின் இளவரசியாக புகழப்படும் கொடைக்கானலுக்கு செல்வதில் சுற்றுலாப் பயணிகள் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர். காரணம், மற்ற சுற்றுலாத்தலமான ஊட்டி, ஏற்காடு பகுதிகளில் பல்வேறு கட்டுப்பாடுகள் இருப்பதுதான். இதனால், தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர். குறிப்பாக, வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய வார இறுதி நாட்களில் கொடைக்கானலில் கூட்டம் களை கட்டுகிறது. 

இந்த சூழலை பயன்படுத்திக் கொண்ட அங்குள்ள தங்கும் விடுதிகளின் உரிமையாளர்கள், கோடை வெயிலை தணிக்க வரும் சுற்றுலா பயணிகளை குறிவைத்து அதிக கட்டணங்களை வசூலிக்க துவங்கியுள்ளனர். பெரும்பாலான விடுதிகள், விலைப்பட்டியலை குறிப்பிடாமலும், உரிய அனுமதி இன்றியும் செயல்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தனியார் விடுதிகளில் 2 நபர்கள் தங்க, நாலாயிரம் முதல் பத்தாயிரம் ரூபாய் வரை கேட்பதால் அதிர்ச்சிக்குள்ளாகும் சாமானிய மக்கள், வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க கொடைக்கானல் வர வேண்டுமென்றால் வட்டிக்கு கடன் வாங்கி தான் ஒருநாள் தங்க முடிவதாக வேதனை தெரிவித்து செல்கின்றனர். 

கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு விதிமுறைகளை மீறியதாக கொடைக்கானலில் 307 வணிக கட்டிடங்கள் நகராட்சியால் பூட்டி சீல் வைக்கப்பட்டது. குடியிருப்பு என அனுமதி பெற்று தங்கும் விடுதிகளாக மாற்றி விதிமீறலில் ஈடுபட்ட பல்வேறு காட்டேஜ்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டு பூட்டி சீல் வைக்கப்பட்டன. இதன் காரணமாக கொடைக்கானலில் தற்போது அதிக அளவில் தங்கும் விடுதிகள் இல்லாத சூழல் நிலவுகிறது. ஆனால் சுற்றுலா பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அனுமதி பெறாத காட்டேஜ்கள் புற்றீசல்கள் போல் முளைத்துள்ளாக குற்றம்சாட்டுகின்றனர் சமூக ஆர்வலர்கள்... 

தற்போது செயல்பாட்டில் உள்ள இந்த காட்டேஜ்கள் மற்றும் உரிமம் பெறாத தங்கும் விடுதிகள், அதிக அளவிலான சுற்றுலா பயணிகளின் வருகையை ஒட்டி கட்டணக் கொள்ளையில் இறங்கியுள்ளன. சர்வ சாதாரணமாக ஒரு தங்கும் அறைக்கு 4 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை ஒருநாள் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. 

அதீத கட்டணம் குறித்து கேள்விகேட்கும் சுற்றுலா பயணிகளுக்கு அலட்சியமாக பதிலளிக்கும் தங்கும் விடுதி நிர்வாகிகள், கேள்வி கேட்கும் சுற்றுலா பயணிகளை அனுமதிக்க மறுப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. இவ்வாரு உரிய அனுமதியின்றி இயங்கும் தங்கும் விடுதிகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதுடன், போதிய தங்கும் வசதிகளை ஏற்படுத்தித்தர அரசு நடவடிக்கை எடுக்கவேண்டுமென கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

வெயிலை தணிக்க கொடைக்கானலுக்கு செல்வோரிடம், அதனை சாதகமாக வைத்து கட்டண கொள்ளையில் ஈடுபடும் தங்கும் விடுதிகளால், வேதனையையே சந்திப்பதாக சுற்றுலா பயணிகள் தெரிவித்துள்ளனர். 

Night
Day