கரையை கடந்தது 'மோன்தா' தீவிர புயல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வங்கக் கடலில் உருவான மோன்தா புயல் நள்ளிரவில் மசூலிபட்டினம் - கலிங்கபட்டினம் இடையே கரையைக் கடந்தது.

வங்கக் கடலில் உருவான மோந்தா புயல் நள்ளிரவில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி நேற்றிரவு 7.30 மணியளவில் மோன்தா புயல் மசூலிபட்டினம் - கலிங்கபட்டினம் இடையே கரையை கடக்க தொடங்கியது. தொடர்ந்து நள்ளிரவு 12.30 மணிக்கு புயல் கரையை கடந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.  இந்நிலையில், ஆந்திராவின் பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது.

புயல் காரணமாக மசூலிப்பட்டினம், கிருஷ்ணா ஆகிய கடலோர பகுதிகளில் மின் கம்பங்கள், ராட்சத மரங்கள் ஆகியவை வேரோடு சாய்ந்தன. மேலும் இடி, மின்னலுடன் விடிய, விடிய கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது.

புயல் காரணமாக ஆந்திராவில் இருந்து சென்னைக்கு வர இருந்த 6 விமானங்களும், சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு செல்ல இருந்த 3 விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. ஆந்திராவில் கனமழை பெய்து வருவதால் 75 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.

புயல் காரணமாக ஆந்திராவில் 3 ஆயிரத்து 778 கிராமங்கள் பாதிக்கப்பட்டதாக முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார். மேலும் 1 லட்சத்து 76 ஆயிரம் ஹெக்டர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு அழிந்ததாக கூறினார்.

இதனிடையே, புயல் காரணமாக கோனசீமா பகுதியில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த பெண் பயணித்த கார் மீது மரம் முறிந்து விழுந்தது. இதில் அப்பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் ஆட்டோ ஓட்டுனரும், 1 சிறுவனும் படுகாயமடைந்தனர். அதேபோல், அல்லூரி மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கிய கர்ப்பிணி பெண்ணை மீட்புப்படையினர் மீட்டனர்.

Night
Day