பீகார் தேர்தல் : குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை - மகா கூட்டணி தேர்தல் அறிக்கை வெளியீடு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

காங்கிரஸ் தலைமையிலான மகாகத்பந்தன் கூட்டணி, பீகார் சட்டப்பேரவை தேர்தலுக்கான தங்களது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. ஆட்சிக்கு வந்த 20 நாட்களுக்குள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க சட்டம் நிறைவேற்றப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகளை மகாகத்பந்தன் கூட்டணி அறிவித்துள்ளது.

பீகார் மாநிலத்தில் உள்ள 243 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் வரும் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் காங்கிரஸ் தலைமையிலான மகாகத்பந்தன் கூட்டணி இடையே போட்டி நிலவுகிறது. இந்த நிலையில், பாட்னாவில் மகாகத்பந்தன் கூட்டணியின் தேர்தல் அறிக்கையை, ஆர்.ஜே.டி கட்சியின் தலைவரும், மகா கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளருமான தேஜஸ்வி யாதவ் வெளியிட்டுள்ளார்.  

அதன்படி, ஆட்சிக்கு வந்த 20 நாட்களுக்குள், மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவதற்கான சட்டம் நிறைவேற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும், டிசம்பர் 1ஆம் தேதி முதல் பெண்களுக்கு மாதத்திற்கு 2 ஆயிரத்து 500 ரூபாயும், ஆண்டுதோறும் 30 ஆயிரம் ரூபாய் நிதியுதவியாக வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.  

ஒவ்வொரு குடும்பத்திற்கும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்றும், வக்ஃப் திருத்த மசோதா நிறுத்தி வைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும், விவசாயிகள் குறைந்தபட்ச ஆதரவு விலையில் அனைத்து பயிர்களையும் வாங்குவதற்கு உத்தரவாதம் அளிக்கப்படும் என்றும், ஒவ்வொரு தனிநபருக்கும் 25 லட்சம் ரூபாய் வரை இலவச சுகாதார காப்பீடு வழங்கப்படும் என்பது உள்ளிட்ட 20 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளது. 

Night
Day