சென்னையை பதம் பார்க்கும் வெயில்... தாகம் தணிக்கும் திடீர் ஜூஸ் கடைகள்...

எழுத்தின் அளவு: அ+ அ-

கோடை வெயில் உக்கிரத்தை காட்ட தொடங்கி உள்ள நிலையில், சென்னையில் ஆங்காங்கே உருவாகியுள்ள ஜூஸ் கடைகள் மக்களின் தாகத்தை தணித்து வருகிறது. பதம் பாக்கும் பங்குனி வெயிலை தணிக்கும் வகையில் அமைந்துள்ள சாலையோரை ஜூஸ் கடைகள் குறித்து விரிவாக காணலாம்...

தமிழகம் முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. பல இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை கடந்து வெயில் பதிவாகி வருவதை அன்றாடம் காண முடிகிறது. 

"இந்த ஆண்டு வெயில் கொஞ்சம் அதிகம்" என ஒவ்வொரு ஆண்டும் சூரியனை வசைப்பாடுவது வழக்கம். ஆனால், உண்மையிலேயே இந்த ஆண்டு வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது மக்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது. 

குறிப்பாக மக்கள் தொகை அதிகம் உள்ள சென்னை மாநகரில், வாகனங்களின் பெருக்கம், போக்குவரத்து நெரிசல் போன்ற காரணங்களால் வெப்பத்தை அதிகமாகவே உணர முடிகிறது.

இதனால் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பித்துக்கொள்ள குளிர்பானங்களை நாடிச் செல்ல தொடங்கி உள்ளனர் பொதுமக்கள். இதன்காரணமாக, சென்னையின் பெரும்பாலான தெருக்களில் தண்ணீர், கிர்ணி, தர்பூசணி பழக்கடைகள், ஜூஸ் கடைகள், கரும்புச்சாறு, இளநீர் ஜூஸ், நொங்கு கடைகள் திடீரென அதிக அளவில் உருவாகியுள்ளன.

"பங்குனி வெயில் பல்லை காட்டிகிட்டு அடிக்குது" என்ற வடிவேல் நகைச்சுவை போல், பங்குனி மாதத்தில் சாலைகளில் செல்லக்கூடிய பொதுமக்கள் மற்றும்  வாகனஓட்டிகள் வெயிலின் தாக்கத்தில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளவும், தங்கள் உடலை குளுமை படுத்த சாலையோர பழக்கடைகள் மற்றும் ஜீஸ் கடைகளில் கூட்டமாக நிற்பதே வெயிலின் கொடுமைக்கு சான்றாக உள்ளது.

ஏராளமான ஜூஸ்கள் இருந்த போதும் இளநீர் ஜூஸ் குடிப்பதற்கு மக்கள் அதிக ஆர்வம் காட்டுவதாகவும், முழுக்க முழுக்க இயற்கை பொருட்களான, இளநீர், பாதாம் பிசின், சப்ஜா விதைகளை கொண்டு தயாரிக்கப்படும் இந்த ஜூஸ் உடலுக்கு குளிர்ச்சி அளிப்பதோடு, சோர்வையும் நீக்குவதாகவும், இதனால் இளநீர் ஜூஸிற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதாகவும் பழச்சாறு விற்பனை செய்து வரும் நடராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் வெயில் மிகக் கடுமையாக இருக்கும் சூழலில் பேருந்தில் பயணிப்பது கடினமாக இருப்பதாகவும், சாலையோரங்களில் இருக்கும் ஜூஸ் கடைகள் வெயிலின் தாக்கத்தை குறைக்க மிகவும் உதவியாக இருப்பதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

வெப்பத்தின் தாக்கத்தை குறைக்க வழியில்லை என்ற போதிலும், அதன் தாக்கத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்ள பழச்சாறு கடைகளே குறிப்பாக சாலையோர கடைகளே உற்ற நண்பனாக இருக்கிறது என்பது நிதர்சனமான உண்மை....

Night
Day