பாமக வேட்பாளர் தங்கர் பச்சானுக்கு கிளி ஜோதிடம் பார்த்தவர் கைது செய்யப்பட்டு விடுதலை

எழுத்தின் அளவு: அ+ அ-

கடலூர் மக்களவைத் தொகுதியின் பாமக வேட்பாளர் தங்கர் பச்சானுக்கு கிளி ஜோதிடம் பார்த்த ஜோதிடர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். அரசியல் ஆட்டத்திற்காக ஏழையின் வயிற்றில் அடித்த திமுக அரசுக்கு கண்டனங்கள் எழுந்தவுடன் கிளி ஜோதிடர் விடுவிக்கப்பட்டது குறித்து விரிவாகப் பார்க்கலாம்...

கடலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் தங்கர் பச்சான், அந்த தொகுதிக்குட்பட்ட தென்னம்பாக்கம் பகுதியில், 2 நாட்களுக்கு முன்பு பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது சாலை ஓரம் அமர்ந்திருந்த கிளி ஜோதிடரிடம் ஜோதிடம் பார்த்தார். கிளி எடுத்துக் கொடுத்த சீட்டில், அழகுமுத்து அய்யனார் படம் வந்ததால், அங்கிருந்த தொண்டர்கள் அனைவரும் ஆர்ப்பரித்தனர். தேர்தலில் வெற்றி பெறுவீர்கள் என ஜோதிடர் கூறியதைக் கேட்ட பாமக தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவிய நிலையில், கிளி ஜோதிடரான செல்வராஜ்  கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் சேர்த்து, மேலும் ஒரு கிளி ஜோதிடரும் கைது செய்யப்பட்டார். அவர்களிடம் இருந்து 4 கிளிகளை வனத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். பச்சைக் கிளிகளை கூண்டுகளுக்குள் அடைத்து வைத்து ஜோதிடம் பார்த்ததாகக் கூறி வனத்துறையினர் இந்த நடவடிக்கையை எடுத்ததாகச் சொல்லப்படுகிறது. ஆனால், தமிழ்நாடு முழுவதும் லட்சக்கணக்கான கிளி சோதிடர்கள்  கிளிகளை கூண்டில் வைத்து சோதிடம் பார்த்து வருவது அனைவரும் அறிந்ததே. இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், இப்போது கைது செய்யப்பட்ட சோதிடர் அதே இடத்தில் பல ஆண்டுகளாக சோதிடம் பார்த்து வருவதாகவும், அப்போதெல்லாம் அவர் கைது செய்யப்படவில்லை எனச் சுட்டிக் காட்டியுள்ளார். அதேபோல் மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆவாரா? என்று அவரது துணைவியார் நூற்றுக்கணக்கான சோதிடர்களிடம் கிளி சோதிடம் பார்த்திருப்பதையும் அன்புமணி சுட்டிக் காட்டியுள்ளார். துர்கா ஜோதிடம் பார்த்த கிளி சோதிடர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். இந்த நடவடிக்கை மூலம் திமுகவின் தோல்வி பயம் அப்பட்டமாக தெரிவதாகவும், அக்கட்சி எந்த அளவுக்கு முட்டாள் தனத்திலும், மூட நம்பிக்கையிலும் ஊறியிருக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம் எனவும் அன்புமணி காட்டமாகக் கூறியுள்ளார். திமுக அரசு, ஓர் ஏழை கிளி சோதிடரை கைது செய்து அதன் வீரத்தைக் காட்டியிருப்பதாகவும், அந்த சோதிடரின் பிழைப்பில் மண்ணைப் போட்டிருப்பதாகவும் அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார். 

அதேவேளையில், பிரச்சார யுக்திக்காக, கிளி ஜோதிடரிடம் ஜோதிடம் பார்த்ததை வீடியோவாக வெளியிட்டதும் செல்வராஜின் கைதுக்கு காரணம் ஆகியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த அரசியல் ஆட்டத்தில் ஏழைகள் என்ன பகடைக் காய்களா? என பொதுமக்கள் கேள்வி எழுப்பிவருகின்றனர். இதனிடையே பொதுமக்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட கிளி ஜோதிடர்கள் இருவரும் விடுவிக்கப்பட்டனர். 

varient
Night
Day