காஞ்சிபுரத்தில் போலி நகைகளை வைத்து கோடிக்கணக்கில் சுருட்டல்... ஆய்வில் சிக்கிய மோசடி கும்பல்...

எழுத்தின் அளவு: அ+ அ-

காஞ்சிபுரத்தில் பல்வேறு இந்தியன் வங்கி கிளைகளில் போலி நகைகளை அடகு வைத்து சுமார் இரண்டரை கோடி ரூபாய் மோசடி செய்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். போலி நகைகளை வைத்து மோசடி செய்தது எப்படி?, மோசடி கும்பல் எப்படி சிக்கியது? வங்கி அதிகாரிகளுக்கு இதில் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்...

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள இந்தியன் வங்கிகளில் கடந்த ஆண்டு வைக்கப்பட்டுள்ள அடமான நகைகள் தொடர்பாக வங்கி அதிகாரிகள் ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது சில நகைகளின் எடை மற்றும் தரம் குறித்து அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து காஞ்சிபுரம் காரப்பேட்டையில் உள்ள இந்தியன் வங்கி, கம்மவார் பாளையம் இந்தியன் வங்கி மற்றும் சங்கரமடம் அருகில் உள்ள இந்தியன் வங்கி ஆகிய மூன்று கிளைகளிலும் அடமானம் வைக்கப்பட்ட நகைகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது 2023 மே முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில் இந்த மூன்று வங்கி கிளைகளிலும் அடமானம் வைக்கப்பட்ட சில நகைகள் தங்கம் முலாம் பூசி அடமானம் வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து போலி நகைகளை மோசடி செய்து அடமானம் வைத்தவர்களின் விவரங்களை தயார் செய்து இந்தியன் வங்கியின் மண்டல மேலாளர் ராஜாராமன் காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்து விவரங்களை ஒப்படைத்தார். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் சென்னையை சேர்ந்த ஏ.ஜி.சவரணன் என்பவர் போலி நகைகளை தயாரித்து மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது தங்க முலாம் பூசிய நகைகளை போலியாக தயாரித்து காஞ்சிபுரம், ராணிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் சில நபர்களை குறிவைத்து, அவர்களிடம் நகைகளை அடகு வைத்து கொடுத்தால் கமிஷன் கொடுக்கிறேன் எனக்கூறி ஆசை வலையில் வீழ்த்தியுள்ளார்.

ராணிப்பேட்டையை சேர்ந்த மேகநாதன், பிரகாஷ், சுரேந்திரகுமார் ஆகியோரை கையாட்களாக பயன்படுத்தி அவர்கள் மூலம் உறவினர்கள், விவசாயிகளை பிடித்து, அவர்களின் வங்கி கணக்கு மூலம் போலி நகைகளை அடகு வைத்துள்ளது விசாரணையில் அம்பலமானது.

காரப்பேட்டை வங்கி கிளையில் சுமார் 1 கோடியே 51 லட்சம் ரூபாயும், சங்கரமட வங்கிக் கிளையில் 35 லட்சத்து 21 ஆயிரம் ரூபாயும், கம்மவார் பாளையம் இந்தியன் வங்கிக் கிளையில் 66 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயும் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டதும் கண்டு பிடிக்கப்பட்டது.

இதையடுத்து, மோசடிக்கு உடந்தையாக இருந்த மேகநாதன், பிரகாஷ், சுரேந்தகுமார் ஆகியோரை கைது செய்த போலீசார், வழக்கின் முக்கிய குற்றவாளியான சரவணன், ராஜேஷ் ஆகியோரை தேடி வருகின்றனர். நகைகளை அடகு வைக்க உறுதுணையாக செயல்பட்டவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், இந்த வழக்கில் மேலும் பலர் சிக்க வாய்ப்புள்ளதாகவும் போலீசார் தகவல் தெரிவித்தனர்.

Night
Day