சென்னையில் 3வது நாளாக செவிலியர்கள் தொடர் போராட்டம்

எழுத்தின் அளவு: அ+ அ-

தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் செவிலியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய கோரி மூன்றாவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் செவிலியர்களை பணிநிரந்தரம் செய்வதாக வாக்குறுதி அளித்து விளம்பர திமுக அரசு ஆட்சிக்கு வந்தது. தற்போது ஆட்சி முடியும் தருவாயில் உள்ள நிலையில், கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் இந்த விடியா அரசு அலட்சியம் காட்டி வருகிறது. இந்நிலையில், வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி, திமுக அரசைக் கண்டித்து தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாடு சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக, செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் 300-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தின்போது விடியா திமுக அரசைக் கண்டித்தும், வாக்குறுதியை நிறைவேற்றக் கோரியும் செவிலியர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

அதே போல், கோவை அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் கொட்டும் பனியில் விடிய விடிய அமர்ந்திருந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது தேர்தல் காலத்தில் திமுக அரசு ஆட்சி அமைந்ததும் அனைத்து செவிலியர்களையும் பணி நிரந்தரம் செய்வோம் என வாக்குறுதி அளிக்கப்பட்டதாகவும், ஆனால் ஆட்சி அமைந்து நீண்ட காலம் ஆகியும் செவிலியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்று குற்றம்சாட்டினர். மேலும், நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து போராடிய செவிலியர்களை கைது செய்ததற்கும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.  


Night
Day