BSNL நிறுவன கட்டடத்தில் தீ விபத்து - இணைய சேவைகள் பாதிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை அண்ணா சாலையில் உள்ள பி.எஸ்.என்.எல். மத்திய மண்டல அலுவலகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் இணையதள சேவை முடங்கியுள்ளதால் வாடிக்கையாளர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

சென்னை அண்ணா சாலையில் 8 மாடிகள் கொண்ட பி.எஸ்.என்.எல். மத்திய மண்டல அலுவலகத்தின் 2வது மாடியில் திடீரென தீப்பிடித்து எரிந்து கரும்புகை வெளியேறியது. இதனால் அச்சமடைந்த ஊழியர்கள் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். வெப்பேரி, திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. தீ விபத்தை கண்டு அச்சமடைந்து 6-வது தளத்திற்கு சென்ற ஊழியர் ஒருவரை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.

 விபத்து காரணமாக பி.எஸ்.என்.எல்.-ன் லேண்ட்லைன் மற்றும் 4ஜி இணையதள சேவைகளும் முடங்கின. சென்னை முழுவதும் இணைய சேவை முடங்கியதால் வாடிக்கையாளர்கள் அவதியுற்றனர். ஆன்லைன் மூலம் மின்கட்டணம் செலுத்துவதும், மின் அலுவலகங்களில் மின் கட்டணம் செலுத்தும் பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் 108 ஆம்புலன்ஸ் சேவை அழைப்புக்கான சர்வர், இதே கட்டிடத்தில் இயங்கி வருவதால் 108 ஆம்புலன்ஸ் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று காவல் கட்டுப்பாட்டு அறைக்கான சேவையிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த தீவிபத்து குறித்து சிந்தாதிரிப்பேட்டை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். தீ விபத்து குறித்து புகார் அளிக்கப்பட்ட ஒரு மணி நேரத்திற்கு பிறகே தீயணைப்பு துறையினர் வந்ததாக பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் புகார் தெரிவிக்கின்றனர். 


Night
Day