சென்னையில் சரிந்த வாக்கு சதவீதம் - வேட்பாளர்கள் மீதான அதிருப்தியா!

எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தின் தலைநகரான சென்னையின் மூன்று நாடாளுமன்ற தொகுதிகளிலும் கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை விட குறைவான வாக்கு சதவீதமே பதிவாகியுள்ளது. எந்த நாடாளுமன்ற தொகுதியில் எத்தனை சதவீதம் குறைவாக பதிவாகியுள்ளது என்பது குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.

தமிழகம் முழுவதிலும் 39 நாடாளுமன்ற தேர்தலிலும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு வெள்ளிக்கிழமை நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் தமிழகம் முழுவதிலும் கடந்த நாடாளுமன்ற தேர்தலை காட்டிலும், இந்த தேர்தலில் வாக்குப்பதிவு கணிசமாக குறைந்துள்ளது. 

தமிழகத்தின் தலைநகரான சென்னையை பொருத்தவரை மத்திய சென்னை, தென் சென்னை, வடசென்னை என மூன்று நாடாளுமன்ற தொகுதிகளிலும் வாக்கு சதவீதம் கணிசமாக குறைந்துள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வடசென்னை தொகுதியில் 64.26 சதவீதம் வாக்கு பதிவாகி இருந்த நிலையில், 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 60.13 சதவீதம் வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது. கடந்த தேர்தலை விட, வடசென்னையை பொறுத்தவரை மூன்று சதவீதம் வாக்குகள் குறைவாக பதிவாகியுள்ளது. 

கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தென் சென்னை தொகுதியில் 57.07 சதவீதம் வாக்கு பதிவாகி இருந்த நிலையில், 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 54.27 சதவீதம் வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது. தென் சென்னையை பொறுத்தவரை கடந்த நாடாளுமன்ற தேர்தலை விட மூன்று சதவீதம் வாக்குகள் குறைவாக பதிவாகியுள்ளது. 

இதேபோல் மத்திய சென்னை தொகுதியில் கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மத்திய சென்னை பகுதியில் 58.98 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்த நிலையில், 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் 53.91 சதவீதம் வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது. மத்திய சென்னையை பொருத்தவரை கடந்த நாடாளுமன்ற தேர்தலில் விட 5 சதவீதம் வாக்குகள் குறைவாக பதிவாகியுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களே தற்போது மீண்டும் மூன்று நாடாளுமன்ற தொகுதிகளில் களமிறக்கப்பட்டதும், அவர்கள் மீதான அதிருத்தியும் வாக்கு சதவீதம் குறைந்ததற்கான காரணங்களாக இருக்கும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

குறிப்பாக சென்னையை பொறுத்தவரை பெருமழை வெள்ளத்தின் போது சென்னையில் உள்ள மூன்று தொகுதிகளில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள், பொதுமக்களை வந்து சந்திக்காததும், அவர்களின் குறைகளை சரி செய்வதற்கான நடவடிக்கைகளை கடந்த ஐந்து ஆண்டுகளில் எடுக்காததும், யாருக்கு வாக்களித்து என்ன பலன் கிடைக்கப் போகிறது என்று அவநம்பிக்கையை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி இருக்கலாம் என கருதப்படுகிறது.

மூன்று நாடாளுமன்ற தொகுதிகளில் மொத்தமாக 48.60 லட்சம் வாக்காளர்கள் உள்ள நிலையில், 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தமாக சென்னையில் 56.01 சதவிகிதம் வாக்குகள் பதிவாகி இருப்பதாக மாவட்டத் தேர்தல் அலுவலர் ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இவை 2019 ஆம் ஆண்டு பதிவான வாக்கு சதவீதத்தை விட 3 சதவீதம் குறைவாக பதிவாகியுள்ளதாக தெரிவித்தார். இதன் மூலம் 21 லட்சம் வாக்காளர்கள் சென்னையில் வாக்களிக்கவில்லை என்பது உறுதியாகி உள்ளது.

அதேபோல் கடந்த காலங்களை விட வெயிலின் தாக்கம் என்பது தமிழகத்தில் அதிகமாக இருந்ததன் காரணமாகவும், ஓட்டு சதவீதம் குறைந்திருக்கலாம் என கூறப்படுகிறது. ஓட்டு சதவீதம் குறைந்தது குறித்து சென்னை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ராதா கிருஷ்ணன் தெரிவிக்கையில், சென்னையில் ஒரு சில பகுதிகளில் வாக்கு சதவீதம் 70 சதவீதம் பதிவாகி இருந்தாலும், சராசரியாக சென்னையில் மொத்தமாக 56.01 சதவீதம் வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளதாக தெரிவித்தார்.

நகர்ப்புற மக்களின் சுணக்கம் காரணமாகவும், வெயிலின் தாக்கம் காரணமாகவும் வாக்குபதிவு குறைந்து இருக்கலாம் என்றும், சென்னையை பொறுத்தவரை 100% வாக்களிக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதாலேயே தற்போது 50 சதவீதம் வாக்குகளாவது பதிவாகி இருப்பதாக ராதா கிருஷ்ணன் தெரிவித்தார்.

இனிவரும் தேர்தல்களிலாவது ஜனநாயக கடமைகளை ஆற்றுவதற்கு அனைவரும் விழிப்புணர்வோடு இருந்து, 100 சதவீத வாக்குகளை பதிவு செய்து தங்களது ஜனநாயக கடமை ஆற்ற வேண்டும் என்பதே அனைவரது விருப்பமாக உள்ளது. 

Night
Day