நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மன்னிப்பு கோரியதையடுத்து அவர் மீது நடிகை விஜயலட்சுமி தொடர்ந்த வழக்குகளை உச்சநீதிமன்றம் ரத்து செய்து வழக்கை முடித்து வைத்தது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை பாலியல் ரீதியாக ஏமாற்றி விட்டதாக நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில் சீமான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் சீமான் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.வி நாகரத்னா,ஆர்.மகாதேவன் அமர்வு இரு தரப்பும் பரஸ்பர மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும், வழக்கை முடித்து வைக்க நீதிமன்றம் விரும்புவதாகவும் தெரிவித்து விசாரணையை இன்று ஒத்தி வைத்தது.
அதன்படி இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது விஜயலட்சுமி-யிடம் நிபந்தனையற்ற மன்னிப்பை கேட்பதாக கூறி சீமான் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார். இதேபோல் நடிகை விஜயலட்சுமியும் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்தார்.
சீமான் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், தனது சொல் மற்றும் செயலால் விஜயலட்சுமிக்கு ஏற்பட்ட எந்த ஒரு வலி அல்லது காயத்திற்கும் நிபந்தனையின்றி மன்னிப்பு கேட்பதாக தெரிவித்துள்ளார். மேலும் விஜயலட்சுமிக்கு எதிராக தான் கூறிய அனைத்து அறிக்கைகள் மற்றும் குற்றச்சாட்டுகளையும் திரும்ப பெறுவதாகவும், விஜயலட்சுமி குறித்து ஊடகங்களில் எந்த கருத்தையும் தெரிவிக்க மாட்டேன் எனவும் உறுதியளித்துள்ளார். இதேபோல் விஜயலட்சுமியும் தனக்கு உரிய மரியாதை வழங்குவார் என தான் நம்புவதாக கூறியுள்ள சீமான், தனது பிரமாண பத்திரத்தை ஏற்று தற்போதைய நடவடிக்கைகளை முடித்து வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
நடிகை விஜயலட்சுமி தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் சீமான் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவது தனது கண்ணியத்தை மீட்டெடுக்கும் என்பதால் சீமான் மீது தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் சீமான் மற்றும் அவர்களது ஆதரவாளர்களால் தான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தனது குடும்பமும் பொருளாதார ரீதியாக நலிவடைந்துள்ள நிலையில் கை கால்கள் செயலிழந்துள்ள தனது சகோதரியை கவனிக்கும் பொறுப்பு உள்ளதால் தனது வாழ்வாதாரத்துக்காக உரிய இழப்பீட்டை வழங்க உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
இந்நிலையில் இருவரும் பரஸ்பர மன்னிப்பை கேட்டுக் கொண்டதால் வழக்கை முடித்து வைப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர். சீமான் மீதான விஜயலட்சுமியின் புகார் தொடர்பான வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்வதாகவும் சீமானுக்கு எதிரான புகாரை திரும்ப பெறுவதாக விஜயலட்சுமி கூறியதை தொடர்ந்து அந்த வழக்குகளை ரத்து செய்வதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர். அதேநேரத்தில் இரு தரப்பும் பிரமாண பத்திரத்தில் கூறியுள்ளதை உறுதியாக கடைப்பிடிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தி உள்ளனர்.