கச்சத்தீவு அந்தோணியார் கோயில் திருவிழாவை புறக்கணித்த மீனவர்கள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இலங்கையில் தமிழக மீனவர்கள் சிறையில் அடைக்கப்படுவதை கண்டித்து, கச்சத்தீவு அந்தோணியார் கோயில் திருவிழாவை ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் புறக்கணித்ததால் ராமேஸ்வரம் துறைமுகம் வெறிச்சோடி காணப்பட்டது. 

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கடந்த 4ம் தேதி 23 ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது. அவர்களில் இரண்டு மீனவர்களுக்கு 6 மாத சிறை தண்டனையும் மற்றொரு மீனவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும் விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பு ராமேஸ்வரம் மீனவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், இலங்கை நீதிமன்றத்தின் தீர்ப்பை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறனர்.

இதன் காரணமாக இலங்கை அரசை கண்டித்து கச்சத்தீவு திருவிழாவை புறக்கணிக்க போவதாக ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் அறிவித்திருந்தனர். இதனால், கச்சத்தீவு திருவிழாவுக்கு முன்பதிவு செய்திருந்தவர்களும், மீனவர்களும் இன்று செல்லாததால் ராமேஸ்வரம் துறைமுகம் களையிழந்து காணப்படுகிறது. மேலும், நாளை முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ராமேஸ்வரம் மீனவர்கள் அறிவித்துள்ளனர்.

இதனிடையே, கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. நெடுந்தீவு பங்குத்தந்தை மற்றும் யாழ்ப்பாணம் பங்கு தந்தைகள் கலந்து கொண்டு இரவு முழுவதும் ஜெபத்தில் ஈடுபட உள்ளனர். மறுநாள் காலை 7 மணி அளவில் புனித அந்தோணியார் தேர் பவனி உடன் திருவிழா நிறைவடைய உள்ளது. இவ்விழாவில் இந்தியா தரப்பில் கலந்து கொள்ள 3 ஆயிரத்து 500 பேர் பதிவு செய்து இருந்த நிலையில், யாரும் பங்கேற்கவில்லை என ராமேஸ்வரம் வேர்க்கோடு உள்ள பங்கு தந்தை சாயகு தெரிவித்துள்ளார்.


varient
Night
Day