எழுத்தின் அளவு: அ+ அ- அ
வீட்டில் ஒட்டு கேட்கும் கருவி யார் வைத்தார்கள் என்பது குறித்து சிலர் மீது சந்தேகம் இருப்பதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரத்தில் வன்னியர் சங்கத்தின் 46ம் ஆண்டு துவக்க விழாவையொட்டி வன்னியர் சங்க கொடி ஏற்றி வைத்து அம்பேத்கர், பெரியார், காரல் மார்க்ஸ் உள்ளிட்ட தலைவர்களின் சிலைகளுக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், விழுப்புரத்தில் வன்னியர் இடஒதுக்கீடு வழங்க கோரி அன்புமணி ஆர்ப்பாட்டம் நடத்தியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு, வன்னியர் இட ஒதுக்கீட்டிற்காக யார் போராட்டம் நடத்தினாலும் அவர்களுக்கு வாழ்த்துகள் என்று அவர் கூறினார். பூம்புகாரில் நடைபெறவுள்ள பாமக மகளிர் மாநாட்டில் கலந்து கொள்ள அன்புமணிக்கு அழைப்பு விடுக்கப்படுமா என்ற கேள்விக்கு, எல்லோரும் வரலாம், யார் வேண்டுமானாலும் வரலாம் என்று ராமதாஸ் தெரிவித்தார். வீட்டில் ஒட்டு கேட்கும் கருவி யார் வைத்தார்கள் என்பதில் சிலர் மீது சந்தேகம் இருப்பதாகவும், அது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் அவர் கூறினார்.