எழுத்தின் அளவு: அ+ அ- அ
கங்கை கொண்ட சோழபுரத்தில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சியை ஆர்வத்துடன் கேட்டு மகிழ்ந்து, எழுந்து நின்று பாராட்டினார். இதுகுறித்து செய்தி தொகுப்பை தற்போது காணலாம்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள கங்கை கொண்ட சோழபுரத்தில், ராஜேந்திர சோழன் பிறந்தநாள், தெற்காசிய நாடுகள் மீது படையெடுத்த ஆயிரமாவது ஆண்டு விழா, பிரகதீஸ்வரர் கோவில் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டதன் ஆயிரமாவது ஆண்டு விழா என முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது.
பிரதமர் மோடி பங்கேற்ற இந்த விழாவில், இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. முதலில் இளையராஜா இசையில் உருவான ஓம் சிவோகம் பாடல் இசைக்கப்பட்டது. பாடல் முடிந்தவுடன் இருக்கையில் இருந்து எழுந்து நின்ற பிரதமர் மோடி, கைதட்டி இளையராஜா உள்ளிட்ட குழுவினரை வாழ்த்தினார்.
பின்னர் சிவபுராணத்தின் 'நமச்சிவாய வாழ்க நாதன் தாழ் வாழ்க' என்ற சிவபெருமான் பாடலை இசைஞானி இளையராஜா பாடினார். தொடர்ந்து, இளையராஜாவின் திருவாசக சிம்பொனியில் இடம்பெற்ற பூவார் சென்னி மன்னன் பாடல் இசைக்கப்பட்டது.
இசை நிகழ்ச்சியை பிரதமர் மோடி கைகளால் தாளம் போட்டபடி ஆர்வத்துடன் கண்டு ரசித்தார். பார்வையாளர்கள் அனைவரும் இளையராஜாவின் இசையை மெய் மறந்து ரசித்தனர்.
இதையடுத்து பேசிய இசைஞானி இளையராஜா, பூவார் சென்னி மன்னன் பாடலை மாணிக்க வாசகர் எவ்வாறு எழுதினார். அதன் பின்னணி குறித்து விளக்கினார். இறுதியாக பிரதமர் மோடிக்கு இளையராஜா நன்றி கூறினார்.