எழுத்தின் அளவு: அ+ அ- அ
அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள சோழீஸ்வரர் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி சாமி தரிசனம் செய்தார். பின்னர் பிரதமர் மோடி கொண்டு வந்த கங்கை தீர்த்தத்தில் சோழீஸ்வரருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இதுகுறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு....
2 நாட்கள் சுற்றுப்பயணமாக தமிழகத்திற்கு வருகை தந்த பிரதமர் மோடி, தூத்துக்குடி விமான நிலையத்தின் புதிய முனையத்தை திறந்து வைத்தார். இதை தொடர்ந்து திருச்சியில் இரவு தங்கிய பிரதமர் மோடி, அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரத்தில் நடைபெறும் முப்பெரும் விழாவில் பங்கேற்பதற்காக ஹெலிகாப்டர் மூலம் சென்றார். அரியலூர் மாவட்டம் சோழகங்கம் என்ற இடத்தில் அமைக்கப்பட்ட ஹெலிகாப்டர் இறங்குதளத்திற்கு வருகைதந்த பிரதமரை தமிழக ஆர்.என்.ரவி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் வரவேற்வேற்றனர்.
பின்னர், கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள சோழீஸ்வரர் கோயிலுக்கு தமிழர்களின் பாரம்பரிய உடையான வெள்ளை நிற வேட்டி, சட்டை அணிந்து வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி, கோயில் வளாகத்தில் உள்ள சோழர்கள் கால கண்காட்சியை பார்வையிட்டார். சோழர்களின் படை வலிமை, சோழர் காலத்து நாணயங்கள், வாழ்வியல், ஆட்சி நிர்வாகம் ஆகியவற்றை விளக்கும் கல்வெட்டுகள் செப்பேடுகள் ஆகியவற்றைப் பார்வையிட்டார். அப்போது தொல்லியல்துறை நிபுணர்கள் செப்பேடுகளிலும் கல்வெட்டுகளிலும் கூறப்பட்டிருந்த சோழப் பேரரசின் சிறப்புகளை எடுத்துரைத்தனர்.
பின்னர் சோழீஸ்வரர் கோயிலுக்குள் சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதையுடன், வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதையடுத்து கோயில் நுழைவாயிலில் உள்ள விநாயகர், முருகர் சன்னதிகளில் பிரதமர் மோடி வழிபாடு செய்தார். தொடர்ந்து சோழீஸ்வரர் சன்னதிக்கு சென்ற பிரதமர் மோடி வாரணாசியில் இருந்து கொண்டு வரப்பட்ட கங்கை நீரை கொண்டு அபிஷேகம் செய்தார். பின்னர் ஓதுவார்கள் தேவாரம், திருவாசகம் ஓத தீபாராதனை காண்பித்து வழிபட்டார்.
தொடர்ந்து துர்க்கையம்மன், சண்டிகேஸ்வரர், சன்னதிகளில் சுவாமி தரிசனம் செய்தார். தரிசனத்திற்குப் பிறகு கோயில் வளாகத்தில் அமர்ந்த பிரதமர் மோடி, சிறிது நேரம் தியானத்தில் ஈடுபட்டார். இதனையடுத்து கோயில் பிரகாரங்களை பக்தி சிரத்தையுடன் வலம் வந்து வழிபட்டார்.