எழுத்தின் அளவு: அ+ அ- அ
கங்கை கொண்ட சோழபுரத்தில் நடைபெற்ற ஆடித் திருவாதிரை முப்பெரும் விழாவில் ராஜேந்திர சோழனின் நினைவு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார். விழாவில் ஓதுவார்களின் பன்னிரு தேவார திருமுறை பாராயணத்தையும் பக்தி பரவசத்துடன் பிரதமர் மோடி கேட்டு மகிழ்ந்தார்.
அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளான ஆடி திருவாதிரை விழா, கங்கைகொண்ட சோழபுரத்தைக் கட்டத் தொடங்கிய ஆயிரமாவது ஆண்டு விழா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மீது படையெடுத்துச் சென்ற ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழா வெகு சிறப்பாக பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது. முப்பெரும் திருவிழாவாக கொண்டாடப்பட்ட இந்த நிகழ்ச்சியில் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டையுடன் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
அப்போது, ஆடித் திருவாதிரை முப்பெரும் விழாவில் ஓதுவார்களின் பன்னிரு தேவார திருமுறை பாராயணம் பாடப்பட்டது. ஓதுவார்களின் சிறப்பு பாராயணத்தை இரு கரம் கூப்பி பக்தியோடு பிரதமர் மோடி கேட்டார்.
தமிழ் வேதம் என்று போற்றப்படுபவை திருமுறைகள் ஆகும். அவை மொத்தம் பன்னிரண்டு என்று வகுத்திருக்கிறார்கள் பெரியோர்கள். சிவபெருமானைப் போற்றிப் பாடிய பன்னிரண்டு நூல்களின் தொகுப்பான இந்த நூல்கள் வேதங்களுக்கு இணையானவை. ஞான மார்க்கத்தை அடைய உதவுபவை மட்டுமல்ல இந்த வாழ்வில் கஷ்டங்கள் நீக்கி நன்மைகள் அருள்பவை. மொத்தம் 18 ஆயிரத்து 326 பாடல்களைக் கொண்ட தொகுப்பே பன்னிரு திருமுறை என்று போற்றப்படுகின்றன.
ஓதுவார்களின் சிறப்பு பாராயணத்தை தொடர்ந்து, ராஜேந்திர சோழனின் பெருமையை பறைசாற்றும் வகையில் அவருடைய உருவம் பொறித்த நினைவு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார்.
இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பாஜக மாநிலத் தலைவர் நாயினார் நாகேந்திரன் மற்றும் ஆன்மீக பெருமக்களும், ஏராளமான மக்களும் கலந்து கொண்டனர்.