ஃபேஷன் ஷோவில் கலக்கிய குழந்தைகள்... பார்வையாளர்களை ஈர்த்த ராம்ப் வாக்...

எழுத்தின் அளவு: அ+ அ-

திருச்சியில் இளைஞர்கள், இளம்பெண்கள், குழந்தைகள் பங்கேற்ற ஃபேஷன் ஷோ பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. பாரம்பரிய மற்றும் மாடர்ன் உடைகளை அணிந்து பெண்கள், இளைஞர்கள், சிறுவர் சிறுமிகள் ஆகியோர் ஒய்யாரமாக வலம்வந்து பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தினர்...

நவீன மற்றும் புதிய ஆடை வடிவமைப்புகள் வரும் போதெல்லாம் அதனை அங்கீகரிக்க ஃபேஷன் ஷோக்கள் நடத்தி அந்த ஆடைகளை பிரபலப்படுத்தும் ஷோக்கள், மேலைநாடுகளில் பிரபலமடைந்து, பின்னர் தென்னிந்தியாவை கடந்து தற்போது தமிழகத்திலும் பிரபலமடைந்து வருகிறது.  

இந்நிலையில் திருச்சியில் தனியார் அமைப்பு மூலம் இளைஞர், இளம்பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான  மிஸ் திருச்சி, மிஸ்டர் திருச்சி, மிஸ்ஸஸ் திருச்சி, கிட்ஸ் திருச்சி என நவநாகரீக ஃபேஷன் ஷோ கண்காட்சி விமான நிலையம் அருகில் உள்ள தனியார் உள்அரங்கில் நடைபெற்றது.

இந்த பேஷன் ஷோ, வண்ணங்களை மையப்படுத்தி ஆடை வடிவமைப்பாளர்களின் திறனை வெளிப்படுத்தும் வகையில், புதிய ஆடை வடிவமைப்பாளர்களை அதேநேரம் இளைஞர் மற்றும் இளம் பெண்களிடையே ஃபேஷன் குறித்த ஆர்வத்தை தூண்டி அவர்களை மாடலிங்களாக உருவாக்கும் நோக்கில் நடத்தப்பட்டது.

இதில் தமிழகத்தின் முன்னனி ஆடை வடிவமைப்பாளர்களின் எண்ணங்களுக்கு ஏற்ப உருவான நாகரீக மற்றும் மாடர்ன் ஆடைகளை அணிந்து இளம்பெண்கள், இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் ஒய்யாரமாக பார்வையாளர்கள் முன்னிலையில் ராம்ப் வாக் எனப்படும் ஒய்யாரநடை நடந்துவந்து தங்களது ஆடையழகை காட்டி அசத்தினர். குறிப்பாக குழந்தைகள் பலர் வண்ணத்துப்பூச்சி போல் ஆடை அணிந்து வந்து பார்வையாளர்களை கவர்ந்தனர்.

இதற்கிடையே கட்டு மஸ்தான உடல்வாகையை காட்டும் ஆணழகன் போட்டியும் நடத்தப்பட்டன. இளைஞர்கள் பலர் இதில் ஆர்வமுடன் பங்கேற்றனர். 

இதில் மிஸ், மிஸ்ஸஸ் திருச்சி, மிஸ்டர் திருச்சி என பல்வேறு பட்டங்களை வென்றவர்களுக்கு கிரீடம் அணிவித்து கேடயம் கொடுத்து அவர்கள் கௌரவிக்கப்பட்டனர். அதேபோல் பட்டங்கள் வென்றவர்களுக்கு ரொக்க பரிசும் வழங்கப்பட்டது

சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அண்மை காலமாக ஃபேஷன் ஷோக்கள்   அதிகம் நடைபெறுகின்றன. ஒருபுறம் மாடலிங் செல்ல விரும்புவர்களுக்கும், புதுபுது ஆடைகளை தயாரிப்பவர்களுக்கும் ஃபேஷன் ஷோக்கள் ஒரு ஏணிபடியாக இருந்து உதவுகிறது என்பதே உண்மை.     

Night
Day