போதை பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் நடிகர் கிருஷ்ணாவிடம் ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் போதைபொருள் விற்பனை செய்ததாக கடந்த வாரம் பிரசாத் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில், போதை பொருள் வாங்கி பல்வேறு நடிகர் நடிகைகளுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. குறிப்பாக நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் போதை பொருள் பயன்படுத்தியதாக நேரடியாக பார்த்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார். இதுதொடர்பாக நடிகர் ஸ்ரீகாந்திடம் நடத்திய ரத்த பரிசோதனையில் அவர் கொக்கைன் பயன்படுத்தியது உறுதியான நிலையில், போலீசார் அவரை கைது செய்தனர்.
தொடர்ந்து போதை பொருள் விவகாரத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு நடிகர் கிருஷ்ணாவுக்குவும் போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர். கேரளாவில் படப்பிடிப்பில் இருந்த அவரை தொடர்பு கொள்ள முடியாததால் கிருஷ்ணாவை பிடிக்க 5 தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில், கேரளாவில் படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை வந்த கிருஷ்ணாவிடம் ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போதை பொருள் வழக்கில் கைதான பிரசாத், நடிகர் ஸ்ரீகாந்த் ஆகியோர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கிருஷ்ணாவிடம் விசாரணை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.