எழுத்தின் அளவு: அ+ அ- அ
போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து நடிகர் ஸ்ரீகாந்தை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் பல நடிகர், நடிகையர் மீது போதைப் பொருள் பயன்படுத்தியது தொடர்பான புகார் எழுந்துள்ளதால் தமிழ் திரையுலகினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
நுங்கம்பாக்கத்தில் போதை பொருள் விற்பனை செய்ததாக கடந்த வாரம் பிரசாத் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பிரசாத்தின் நண்பரான பிரதீப் குமார் என்பவர் பெங்களூருவில் வசித்து வரும் நைஜீரியாவை சேர்ந்த ஜீரிக் என்பவரிடம் இருந்து கொகைன் என்ற போதைப்பொருளை வாங்கி சென்னையில் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து பிரதீப் குமார் மற்றும் கானா நாட்டை சேர்ந்த ஜான் என்பவரை ஆயிரம் விளக்கு போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் முக்கிய நபராக கருதப்படும் நைஜீரியாவை சேர்ந்த ஜீரீக் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
மேலும், பிரதீப்பிடம் நடத்திய விசாரணையில் போதை பொருள் வாங்கி பல்வேறு நடிகர் நடிகைகளுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. குறிப்பாக நடிகர்கள் ஸ்ரீகாந்த், ஸ்ரீகிருண்ணா ஆகியோர் போதை பொருள் பயன்படுத்தியதாக நேரடியாக பார்த்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதனையடுத்து நடிகர் ஸ்ரீகாந்துக்கு சம்மன் அனுப்பட்டநிலையில், நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் அவர் ஆஜரானார். பின்னர், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போலீசார், அவருக்கு ரத்த மாதிரி பரிசோதனை மேற்கொண்டனர். இந்த பரிசோதனை முடிவில் கோக்கைன் வகை போதை பொருளை ஸ்ரீகாந்த் பயன்படுத்தியது உறுதியாகியுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஸ்ரீகாந்தை கைது செய்த போலீசார் காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.