எழுத்தின் அளவு: அ+ அ- அ
பழம்பெரும் நடிகையான சரோஜா தேவி வயது மூப்பினால் ஏற்பட்ட உடல்நலக்குறைவால் பெங்களூருவில் காலமானார். அவருக்கு வயது 87.
பெங்களூருவை சேர்ந்த ஜாபர் பைரப்பா, ருத்ரம்மா தம்பதியருக்கு 1938 ஆம் ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி பிறந்தார் சரோஜா தேவி. ராதாதேவி என்ற இயற்பெயர் கொண்ட இவருக்கு சரஸ்வதிதேவி, பாமாதேவி, சீதாதேவி, என்ற மூன்று அக்காவும் வசந்தாதேவி என்ற ஒரு தங்கையும் உள்ளனா். சிறுவயதிலேயே சரோஜா தேவியை பெற்றோர் நடனம் கற்றுக்கொள்ள ஊக்குவித்தனர். பின்னாளில் சரோஜா தேவியின் நடிப்பு பயணத்தையும் அவரது தந்தை ஊக்குவித்தார்.
தொடர்ந்து 1955ஆம் ஆண்டு கன்னடத்தில் அறிமுகமான சரோஜா தேவி, தமிழ், தெலுங்கு மொழித் திரைப்படங்களிலும் நடித்து முன்னணி நடிகராக வலம் வந்தார். ஐம்பதாண்டு காலமாக திரைப்படத் துறையில் கோலோச்சிய இவர், 200 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். திரைப்படத்துறையினரால் “கன்னடத்துப் பைங்கிளி”, “அபிநய சரசுவதி” என போற்றப்பட்ட சரோஜா தேவி, தமிழில் கடைசியாக சூர்யாவின் ஆதவன் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
வயது முதிர்வு காரணமாக திரைத்துரையிலிருந்து விலகி பெங்களூருவில் உள்ள இல்லத்தில் ஓய்வு எடுத்து வந்த அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனையடுத்து, பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சரோஜா தேவி, இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். நடிகை சரோஜா தேவியின் மறைவிற்கு திரைப்பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.