பழம்பெரும் நடிகை சரோஜா தேவி மறைவு - அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா இரங்கல்

எழுத்தின் அளவு: அ+ அ-

பழம்பெரும் திரைப்பட நடிகை சரோஜா தேவி மறைவுக்கு அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், பழம்பெரும் திரைப்பட நடிகை சரோஜா தேவி காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றதாகவும், அன்பு சகோதரி சரோஜா தேவியின் மறைவு யாராலும் ஈடு செய்ய முடியாதது என்றும் தெரிவித்துள்ளார். 

கன்னடத்து பைங்கிளி, அபிநய சரஸ்வதி என அனைவராலும் போற்றப்பட்ட சரோஜா தேவி, கொஞ்சும் தமிழ் மொழியில் பேசி ஒவ்வொருவரின் உள்ளங்களையும் கொள்ளை கொண்டவர் என்றும், கடந்த 1955ஆம் ஆண்டு தனது 17வது வயதில் கன்னட திரைப்படத்தில் கால் பதித்த சரோஜா தேவி அவர்கள் தனது தனித்திறமையால் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து சாதனை படைத்துள்ளதாகவும் புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார். 

தமிழ் திரைப்பட வரலாற்றில் புரட்சித்தலைவர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் உள்ளிட்ட திரையுலக ஜாம்பவான்களோடு சேர்ந்து நடித்த பெருமைக்குரியவர் என்றும், அதிலும் குறிப்பாக புரட்சித்தலைவர் அவர்களோடு சேர்ந்து நடித்த நாடோடி மன்னன், அன்பே வா, படகோட்டி உள்ளிட்ட எண்ணற்ற வெற்றிப்படங்கள் இன்றைக்கும் அழியா காவியங்களாக உள்ளதாக சின்னம்மா தெரிவித்துள்ளார்.

புரட்சித்தலைவி அம்மா மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் வைத்திருந்ததோடு, நல்ல நட்புறவுடன் இருந்தவர் எனவும், புரட்சித்தலைவி அம்மாவும் சரோஜா தேவி மீது மிகுந்த அன்பும், பாசமும் வைத்திருந்தார் என்று புரட்சித்தாய் சின்னம்மா கூறியுள்ளார்.

அதேபோன்று, சரோஜா தேவி நடித்த திரைப்படங்களில் உள்ள பாடல்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பும் போது அம்மா மிகவும் விரும்பி பார்ப்பார் என்றும், இந்திய அரசின் உயரிய விருதான பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன் விருதுகள் மற்றும் பல மாநில விருதுகளும் பெற்றுள்ள அன்பு சகோதரி சரோஜா தேவியை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், திரையுலக ரசிகர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாகவும், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுவதாகவும் அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

Night
Day