எழுத்தின் அளவு: அ+ அ- அ
போதைப் பொருள் பயன்படுத்தியதாக எழுந்த புகாரில், நடிகர் கிருஷ்ணாவிடம் தனிப்படை போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தி வந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்தின் ரத்த மாதிரிகளை போலீசார் பரிசோதனை செய்தனர். அதில் அவர் போதை மருந்து உபயோகித்தது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து போதை மருந்து பயன்படுத்திய குற்றத்திற்காக ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டார்.
அதன்பின்னர் நடிகர் கிருஷ்ணாவும் இந்த போதைப்பொருள் வழக்கில் சிக்கியுள்ளார். கிருஷ்ணா, தனது செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்து விட்டு தலைமறைவான இருந்த நிலையில், தனிப்படை அமைத்து போலீசார் அவரை தேடி வந்தனர்.
இந்நிலையில் கேரளாவில் படப்பிடிப்பை முடித்துவிட்டு நேற்று சென்னை திரும்பிய அவரை ஆயிரம்விளக்கு காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தினர். அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், கடந்த 45 நாட்களில் அவர் போதை பொருள் பயன்படுத்தவில்லை என தெரிய வந்தது.
இதனிடையே சிந்தடிக் டிரக்ஸ் எனப்படும் உயர்ரக போதை பொருட்களை உபயோகப்படுத்துக்கும் அளவுக்கு தனது உடல்நிலை இல்லை எனவும் விசாரணையின்போது நடிகர் கிருஷ்ணா தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு ஆஞ்சியோ சிகிச்சை எடுத்துக் கொண்டதற்கான சான்றிதழ்களை போலீசாரிடம் கிருஷ்ணா வழங்கியுள்ளார். தனக்கு கேஸ்டிரிக் பிரச்சனை இருப்பதாகவும் இதனால் அதிர்ச்சியான தகவல்களை கேட்டால் படபடப்பு ஏற்படும் விசாரணையில் நடிகர் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
இதனிடையே, பெசன்ட் நகரில் உள்ள கிருஷ்ணாவின் வீடு மற்றும் காரில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் சுமார் 20 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற விசாரணையில் கொக்கைன் போதை பொருட்கள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, நடிகர் கிருஷ்ணாவை போலீசார் கைது செய்துள்ளனர். நடிகர் ஸ்ரீகாந்தை தொடர்ந்து கிருஷ்ணா கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில் மேலும் பல நடிகர், நடிகைகள் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.