FIR-ல் நயினார் பெயர்! ரூ.4 கோடி யாருடையது!

எழுத்தின் அளவு: அ+ அ-

நெல்லை விரைவு ரயிலில் 4 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு குறித்த முதல் தகவல் அறிக்கையில், பறிமுதல் செய்யப்பட்ட பணம், நயினார் நாகேந்திரனுக்குச் சொந்தமானது தான் எனவும் கூறப்பட்டிருப்பது, தேர்தல் களத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 6ஆம் தேதி அன்று, தாம்பரம் ரயில் நிலையத்தில் வைத்து திருநெல்வேலி விரைவு ரயிலில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளும் தாம்பரம் காவல் துறையினரும் இணைந்து சோதனை நடத்தினர். அப்போது ரயிலில் சந்தேகத்திற்கு இடமாக இருந்த மூன்று நபர்களிடமிருந்து சுமார் 4 கோடி ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர். பணத்தை வைத்திருந்த சதீஷ், நவீன், பெருமாள் மூவரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ப்ளூ டைமண்ட் ஓட்டலில் இருந்து பணம் கொண்டுவரப்பட்டதாகவும் இது நயினார் நாகேந்திரனுக்குச் சொந்தமான பணம் தான் எனவும் அவர்கள் கூறியதாக சொல்லப்படுகிறது. இதை அடுத்து, நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான கீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ள ப்ளூ டைமண்ட் ஹோட்டலில் சோதனை நடத்தப்பட்டு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் பாஜக நிர்வாகி கோவர்தன் என்பவருக்கு சொந்தமான ஹோட்டலிலும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தி ஒரு லட்சம் ரூபாய் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர். 

இது தொடர்பாக கோவர்தனுக்கு சம்மன் அனுப்பி விசாரணைக்கு ஆஜராகுமாறு தாம்பரம் போலீசார் அழைத்துள்ளனர். இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தாம்பரம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்த முதல் தகவல் அறிக்கை வெளியாகி உள்ளது. அதில் பணத்தை கடத்தி வந்த மூவரில் சதிஷ் என்பவர் நைனார் நாகேந்திரனுக்கு சொந்தமான ப்ளூ டைமண்ட் ஹோட்டலில் பணிபுரிந்து வரும் ஊழியர் என்பதும் மேலும் மூவரும் சேர்ந்து சென்னையில் வெவ்வேறு இடங்களிலிருந்து இந்த பணத்தை ஒன்று சேர்த்து ரயில் மூலம் திருநெல்வேலி கொண்டு சென்று தேர்தலில் பட்டுவாடா செய்ய இருந்ததாகவும் மூவரும் வாக்குமூலம் அளித்ததாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், பணம் கொண்டுசெல்லப்பட்ட

அந்த மூவரிடம் இருந்து நயினார் நாகேந்திரனின் எம்எல்ஏ அடையாள அட்டை நகல், பாஜக உறுப்பினர்கள் அடையாள அட்டைகளை தேர்தல் பறக்கும்படையினர் கைப்பற்றியுள்ளனர் என்றும் அந்த எப்ஐஆரில் சொல்லப்பட்டுள்ளது. பல்வேறு நபர்களிடம் இருந்து சிறிதுசிறிது தொகையாக சேர்த்து மொத்தமாக இணைத்து 4 கோடி ரூபாயை கொண்டு செல்ல முயற்சித்ததாக எப்ஐஆரில் தாம்பரம் போலீஸார் குறிப்பிட்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக நைனார் நாகேந்திரனுக்கு சம்மன் அனுப்பி தாம்பரம் காவல்துறை விசாரணைக்கு அழைத்துள்ளனர். மேலும் நான்கு கோடி ரூபாய் பணம் தனக்கு சொந்தமானது இல்லை என நைனார் நாகேந்திரன் கூறிவந்த நிலையில் தாம்பரம் போலீசார் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் இந்த பணம் நைனார் நாகேந்திரனுக்கு சொந்தமானது எனவும் குறிப்பிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

varient
Night
Day