5 தனிப்படை காவலர்களிடம் சிபிஐ அதிகாரிகள் 2-வது நாளாக விசாரணை

எழுத்தின் அளவு: அ+ அ-

மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 5 தனிப்படை காவலர்களிடம் சிபிஐ அதிகாரிகள் 2-வது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் போலீஸ் விசாரணையின்போது மரணடைந்த வழக்கை சிபிஐ போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட தனிப்படை காவலர்களான கண்ணன், பிரபு, ஆனந்த், ராஜா, சங்கரமணிகண்டன் ஆகிய 5 பேரையும் 2 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மதுரை மாவட்ட நீதிமன்றம் சிபிஐக்கு அனுமதி அளித்திருந்தது. 

இதனைதொடர்ந்து மதுரை ஆத்திகுளம் பகுதியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் வைத்து 5 தனிப்படை காவலர்களிடம் தனித்தனியாக சிபிஐ அதிகாரிகள் 2வது நாளாக இன்று விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே காவலர்களிடம் கைப்பற்றப்பட்ட செல்போன் அழைப்புகள் அடிப்படையில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதேபோல்,  சஸ்பெண்ட் செய்யப்பட்ட மானாமதுரை டிஎஸ்பி சண்முகசுந்தரம் மதுரை சிபிஐ அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டு அவரிடமும் 5 தனிப்படை காவலர்கள் அளிக்கும் தகவலின் அடிப்படையிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

விசாரணைக்கு பின் 5 காவலர்களையும் சிபிஐ அதிகாரிகள் இன்று மாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.  

Night
Day