4 சவரன் நகைக்காக மூதாட்டி கொடூர கொலை

எழுத்தின் அளவு: அ+ அ-

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே 4 சவரன் நகைக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சங்ககிரி அருகே வைகுந்தம் பகுதியை சேர்ந்த சின்னப்பொண்ணு என்பவர் கணவர் இறந்துவிட்டதால் தனியாக வசித்து வந்தார். இவரின் மகன், மகளுக்கு திருமணமான நிலையில், மகன் மதியழகன் அதே பகுதியில் தனியாக தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். சின்னப்பொண்ணு தனது வீட்டு அருகே குடியிருக்கும் மாட்டு வியாபாரி ஏழுமலை என்பவரிடன் சில நாட்களாக மாடு வாங்கி தருமாறு கேட்டு வந்தார். இந்நிலையில் கடந்த ஜூலை 23 ஆம் தேதி ஏழுமலை மாடு வாங்கி தருவதாக சின்னபொண்ணுவை அழைத்து சென்றுள்ளார். இரவு வெகுநேரமாகியும் தாய் வீடு திரும்பாததால் அவரது மகன் மதியழகன் ஏழுமலையிடம் தனது தாய் பற்றி கேட்டுள்ளார். அதற்கு ஏழுமலை அவரது மகள் வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டதாக தெரிவித்துள்ளார். தனது தங்கையை தொடர்பு கொண்டு கேட்டபோது அங்கு தாய் வரவில்லை என கூறியதால் பதற்றமடைந்த மதியழகன் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். விசாரணையில் மாடு வாங்கி தருவதாக கூட்டி சென்ற ஏழுமலை மூதாட்டி அணிந்திருந்த 4  சவரன் நகைக்காக கொலை செய்து சாக்கு மூட்டையில் கட்டி ஏரியில் வீசி சென்றது உறுதியானது. இதையடுத்து மாட்டு வியாபாரி ஏழுமலையை போலீசார் கைது செய்தனர். 

Night
Day