எழுத்தின் அளவு: அ+ அ- அ
மதுரை மாநகராட்சி வரி முறைகேடு விவகாரம் தொடர்பாக ராஜினாமா செய்த வரிவிதிப்புக்குழு தலைவரின் கணவர் உள்பட 2 பேரை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர்.
மதுரை மாநகராட்சியில் 150 கோடி ரூபாய் வரி முறைகேடு தொடர்பாக வரி விதிப்பு மண்டல தலைவர்கள் 5 பேர், நிலைக்குழு உறுப்பினர் 2 பேர் என மொத்தம் 7 பேர் அண்மையில் ராஜினாமா செய்தனர். மேலும் வரிவிதிப்பு முறைகேட்டில் தொடர்புடைய ஓய்வு பெற்ற உதவி ஆணையர், உதவி வருவாய் அலுவலர் உள்பட 8 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் அடிப்படையில் டிஐஜி அபிநவ் குமார் தலைமையிலான விசாரணை குழு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், மாநகராட்சி 51-வது வார்டு திமுக கவுன்சிலரும், வரிவிதிப்பு குழு தலைவருமான விஜயலட்சுமி, அவரது கணவர் கண்ணன் மற்றும் 96-வது வார்டைச் சேர்ந்த ஒப்பந்த ஊழியர் செந்தில்பாண்டி ஆகியோர் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர். இவர்களிடம் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் கண்ணன் மற்றும் செந்தில்பாண்டிக்கு முறைகேட்டில் தொடர்பு இருப்பது உறுதியானது. இதையடுத்து இருவரையும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். மேலும் வரிவிதிப்புகுழு தலைவர் விஜயலட்சுமியிடம் மீண்டும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.