லோன் ஆசை காட்டி மோசடி... பலிக்கடான பணிப்பெண்...!!

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை திருவல்லிக்கேணியில் கையெழுத்து கூட போட தெரியாத வீட்டு பணி பெண் பெயரில், வீட்டு உரிமையாளர் 8 லட்சம் கடன் பெற்று மோசடி செய்துள்ளார். வேலைக்கு வந்த பெண்ணை வைத்து லட்சக்கணக்கில் மோசடி செய்யப்பட்ட சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

சென்னை திருவல்லிக்கேணி விக்டோரியா விடுதியின் பின்புறம் உள்ள குடிசை பகுதியில் வசித்து வருபவர் நிர்மலா. இவர் அதே பகுதியில் உள்ள சுபத்ரா தேவி என்பவரது வீட்டில் பணி பெண்ணாக கடந்த வருடம் வேலைக்கு சேர்ந்துள்ளார். நிர்மலாவின் குடும்ப சூழலை புரிந்து கொண்டு உதவி செய்வதாக கூறி நாடகத்தை தொடங்கிய சுபத்ரா தேவியின் மகன் ராஜேந்திரன், குறைந்த வட்டிக்கு கடன் பெற்று தருவதாக கூறியுள்ளார். இதனை நம்பிய நிர்மலா தன்னுடைய ஆதார் அட்டை, பான் அட்டை(pan card) உள்ளிட்டவைகளை ராஜேந்திரனிடம் கொடுத்துள்ளார். 

ராஜேந்திரன் மற்றும் சுபத்ராதேவியின் மருமகன் பாலாஜி ஒன்று சேர்ந்து, நிர்மலாவிடம் மேலும் யாருக்கு கடன் வேண்டுமானாலும் வரச்சொல்.. குறைந்த வட்டியில் லோன் பெற்று தருகிறோம் என ஆசைவார்த்தை கூறியுள்ளனர். இதனால் நிர்மலா தனது வீட்டருகே உள்ள பெண்கள், திருநங்கைகளின் விவரங்களை பெற்று கொடுத்து கடன் கேட்டுள்ளார். ஒவ்வொருவர் பெயரிலும் ஒரு லட்சம் முதல் 5 லட்சம் வரை பாலாஜி பல வங்கிகளில் கடன் பெற்றுள்ளார். அதில் சிலருக்கு முழு பணத்தை கொடுக்காமல் குறைந்த பணத்தை கொடுத்து இவ்வளவு தான் கடன் கிடைத்தது எனக்கூறியுள்ளார் பாலாஜி. மேலும் ஒருசில நபர்களிடம் லோன் கிடைக்கவில்லை என கூறிவிட்டு, அவர்கள் பெயரிலும் வங்கி கடன் பெற்றுள்ளார். 

இந்நிலையில் நிர்மலா தேவியின் சான்றிதழ்களை வைத்து HDFC வங்கியில் புதிதாக கணக்கு தொடங்கிய பாலாஜி, அவர் பெயரில் கிரெடிட் கார்டும் வாங்கியுள்ளார். நிர்மாலாவின் பெயரில் 5 லட்சம் கடன், கிரெடிட் கார்டு மூலம் 75,000 ரூபாய், பைனான்ஸ் மூலம் 1 லட்சத்து 80 ஆயிரம் என 7 லட்சத்திற்கும் மேல் சுருட்டி, சொகுசு வாழ்க்கை வாழ்ந்துள்ளனர். 

இதனிடையே 4 மாதங்களில் நிர்மலாவின் வீட்டிற்கு சென்ற வங்கி அதிகாரிகள், உங்கள் பெயரில் லோன் இருப்பதாகவும் 4 மாதங்களாக தவணை கட்டவில்லை என கூறியதால் நிர்மலா அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து பலரும் இதேபோன்று ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. இந்நிலையில் சுபத்ரா தேவி வீட்டிற்கு சென்று பார்த்தபோது, வீட்டு உரிமையாளர் சுபத்ராதேவி மற்றும் அவருடைய மகன் ராஜேந்திரன் தப்பியோடிய நிலையில், முக்கிய குற்றவாளியான பாலாஜியை பாதிக்கப்பட்டவர்கள் சுற்றி வளைத்து பிடித்து ஐஸ் ஹவுஸ் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். 

போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், இந்த கும்பல் சுமார் 45 லட்சம் வரை பொதுமக்கள் பெயரில் கடன் பெற்றிருப்பது தெரியவந்தது. இதேபோல் திருவல்லிக்கேணியை சில சேர்ந்த இளைஞர்களிடமும் சினிமா துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பாலாஜி நூதன மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து பாலாஜியை கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள சுபத்ரா தேவி மற்றும் ராஜேந்திரனை தேடி வருகின்றனர். 

Night
Day