எழுத்தின் அளவு: அ+ அ- அ
நெல்லையில் தந்தையை தேடி சென்ற சீருடை அணியாத காவலர்கள், அவர் இல்லாததால் 17 வயது மகன் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து விசாரணை நடத்த டிஐஜி சந்தோஷ் உத்தரவிட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே ஆதிச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்த மாயாண்டி என்பவரின் 17 வயது மகன் டுடோரியலில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது மாயாண்டி நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரம் பகுதியில் குடும்பத்தோடு வசித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று சிறுவன் நடந்து சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்து மறித்த 2 பேர், அவருடைய தந்தை குறித்து கேட்டுள்ளனர். இடப்பிரச்னை தொடர்பாக உனது தந்தையை கைது செய்ய வந்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.
அப்போது தனது தந்தை குறித்து தெரியாது என்று கூறியும் அதனை ஏற்க மறுத்த சீருடை அணியாத போலீஸார், அந்த சிறுவனை இருசக்கர வாகனத்தில் ஏற்ற முயன்றுள்ளனர். அப்போது தப்பிக்க முயன்ற சிறுவனை கையைப் பிடித்து இழுத்து கொடூரமாக தாக்கிய போலீசார், லத்தியை வீசியதில் சிறுவனின் கழுத்து பகுதியில் காயம் ஏற்பட்டது. அதோடு தப்பி வீட்டுக்கு ஓடிய சிறுவன் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். இந்த சம்பவம் தொடர்பாக ஹை கிரௌண்ட் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து அறிந்த டிஐஜி சந்தோஷ் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.