எழுத்தின் அளவு: அ+ அ- அ
நெல்லையில் ஆணவக் கொலை செய்யப்பட்ட கவினின் உடலை பெற்றுக் கொள்ள பெற்றோர் சம்மதம் தெரிவித்த நிலையில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவரின் உடல் ஒப்படைக்கப்பட்டது.
நெல்லை பாளையங்கோட்டையை சேர்ந்த மாற்று சமூகத்தை சேர்ந்த பெண்ணை காதலித்த ஐடி ஊழியர் கவின், கடந்த 27ம் தேதி கே.டி.சி நகரில் வைத்து ஆணவக் படுகொலை செய்யப்பட்டார். இளைஞரை கொலை செய்த வழக்கில் பெண்ணின் சகோதரர் சுர்ஜித் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். பெண்ணின் பெற்றோரையும் கைது செய்ய வேண்டும் என்றும் இல்லையென்றால் கவினின் உடலை வாங்க மாட்டோம் என தெரிவித்து கடந்த 5 நாட்களாக அவரின் பெற்றோர் மற்றும் உறவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்தநிலையில், விசாரணைக்குப் பிறகு கொலையாளி சுர்ஜித்தின் தந்தை சரவணனை போலீசார் கைது செய்தனர்.
இதனிடையே கவினின் கொலையில் தனது பெற்றோருக்கு எவ்வித தொடர்பும் இல்லை என காதலி சுபாஷினி வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்தார். இந்தநிலையில், 5 நாட்கள் போராட்டத்திற்கு பிறகு கவினின் உடலை வாங்க பெற்றோர் மற்றும் உறவினர்கள் சம்மதம் தெரிவித்தனர். அதன்படி கவினின் தந்தை சந்திரசேகர், சகோதரர் பிரவீன், தாய்மாமா இசக்கிமுத்து மற்றும் உறவினர்கள் பாளையங்கோட்டையில் உள்ள பிரேத பரிசோதனை கூடத்திற்கு வந்தனர். அங்கு வைத்து கவினின் அவர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து, அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
ஆணவ படுகொலை செய்யப்பட்ட கவின் உடல் அவரது சொந்த ஊரான ஆறுமுகமங்கலம் கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பேரணியாக கொண்டு செல்லப்பட்ட கவின் உடல் வீட்டின் முன் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. கவினின் உடலை பார்த்து அவரது தாய் மற்றும் உறவினர்கள் கதறி அழுத காட்சி காண்போரை கண்கலங்க வைத்தது.