நான் இங்க இருக்கேன்...! என் ஆடி கார் வெளிய இருக்கு..! ரூ.7 கோடி போச்சு..!

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் எம்.எல்.எம் நிறுவனம் நடத்தி இளைஞர்கள் - இளம்பெண்களிடம் ஏழு கோடி ரூபாய் வரை ஏப்பம் விட்ட ஏகலைவன் மீது சென்னை காவல் ஆணையரகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது... பொய்யை மூலதனமாக வைத்து பட்டதாரிகளை முட்டாளாக்கிய பாலகுமரனின் லீலைகள் பற்றி விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

நாம் புகைப்படத்தில் காணும் இந்த நபர் தான் சதுரங்கவேட்டை படத்தில் வருவது போல எம்.எல்.எம். நிறுவனம் நடத்துவதாக கூறி, பலரின் ஆசையை தூண்டி, ஏழு கோடி ரூபாயை ஏப்பம் விட்ட பாலகுமரன் இவர் தான்...

ஈரோட்டில் பட்டப்படிப்பு முடித்த பாலமுருகன் என்பவர் கடந்த 2018ஆம் ஆண்டு முகப்பேர் பகுதியில் குடியேறினார்...

தனது நண்பர்களுடன் வாடகை வீட்டில் வசித்து வந்த பாலமுருகனின் வீட்டுக்கு வந்த அவரது தூரத்து உறவினரான பாலகுமரன், பாலமுருகனின் நண்பர்களுடன் அறிமுகத்தை ஏற்படுத்தி கொண்டுள்ளார்...

நாளடைவில் பாலமுருகனின் நண்பர்கள் அனைவரும் பசையுள்ள பார்ட்டிகள் என்பதை அறிந்த பாலகுமரன், தான் கற்று வைத்திருந்த சகல ஏமாற்று வித்தைகளையும் அவிழ்த்து விட்டார்...

எம்.எல்.எம். நிறுவனத்தில் இயக்குனராக பணியாற்றி வருவதாக ரீல் சுற்றிய பாலகுமரன், தன்னிடம் முதலீடு செய்தவர்கள் அதிக லாபம் சம்பாதித்து கோடீஸ்வரர்களாக வாழ்வதாக பூப்பந்தையே தலையில் வைத்தார்...

பாலகுமரன் கூறியதை அப்படியே நம்பிய பேராசைக்காரர்கள், அடுத்தடுத்து லட்சக்கணக்கான பணத்தை பாலகுமரனிடம் முதலீடு செய்துள்ளனர்...

2021 ஆம் ஆண்டு பிளக்ஸஸ் பிசினஸ் சொல்யூஷன் என்ற நிறுவனத்தை தொடங்கி, தனது ஆசை வலையில் விழுந்த அப்பாவிகளை முதலீடு செய்ய வைத்துள்ளார் பாலகுமரன்...

அடுத்தடுத்து லட்சக்கணக்கில் பலரும் பணம் செலுத்த, வசூல் பல கோடி ரூபாயை தாண்டியதும் ஜூட் விட்டார் பாலகுமரன்...

இதனால் அதிர்ச்சி அடைந்த முதலீட்டாளர்கள், பாலகுமரன் பயன்படுத்திய ஐந்து செல்போன் எண்களில் தொடர்பு கொண்டுள்ளனர்...

தன்னிடம் பேசிய முதலீட்டாளர்களிடம் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு விட்டதாக கூறிய பாலகுமரன், கூடுதலாக 50 லட்சம் ரூபாய் செலுத்தினால் மொத்த பணத்தையும் திரும்ப தருவதாக மீண்டும் வலை விரித்துள்ளார்...

அப்போதும் சுதாரிக்காத அப்பாவி இளைஞர்கள் பலரிடம் கடன் வாங்கி 50 லட்ச ரூபாயை கொடுத்துள்ளனர்...

அந்த பணத்தையும் வாங்கி ஸ்வாஹா விட்ட பாலகுமரன் ஐந்து செல்போனையும் ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட, தாங்கள் ஏகலைவனால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தனர்...

இதைத்தொடர்ந்து யார் இந்த பாலகுமரன் என விசாரணையில் இறங்கிய இளைஞர்கள், அடுத்தடுத்து கிடைத்த தகவல்களால் நெஞ்சே வெடித்து விடும் அளவுக்கு அதிர்ச்சி அடைந்தனர்...

பாலகுமரன் தங்களை போல பல இளைஞர்கள் - இளம்பெண்களை ஏமாற்றி 7 கோடி ரூபாய் வரை ஏமாற்றி இருப்பதை தெரிந்து இளைஞர்கள் பேரதிர்ச்சிக்கு ஆளானார்கள்...

பாலகுமரன் மீது பல்வேறு புகார்கள் காவல்துறையில் குவிந்திருப்பதும் இளைஞர்களுக்கு தெரிய வந்தது... 

இந்நிலையில் பாலகுமரனால் பாதிக்கப்பட்ட அவரது உறவினர் பாலமுருகன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.... 

அதில் தங்களிடம் எப்படி பாலகுமரன் ஏமாற்றினார் என விளக்கிக்கூறிய பாலமுருகன், பெண்கள் பலரும், பாலகுமரனிடம் தங்களுடைய பணத்தை திரும்ப தந்து விடுமாறு கதறி அழும் ஆடியோவையும் காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளார்...

காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்த பின் பேசிய பாலமுருகன், பாலகுமரன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்...

மொத்தத்தில் ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் உருவாகிக்கொண்டே இருப்பார்கள் என்பதை உணர்த்துகிறது இந்த சம்பவம்...

Night
Day