பாலாற்றின் நடுவே தடுப்பணை... அத்துமீறும் ஆந்திரா... அமைதி காக்கும் தமிழக அரசு...

எழுத்தின் அளவு: அ+ அ-

ஆந்திரா மாநிலத்தின் பாலாற்றின் குறுக்கே ஏற்கனவே 22 தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ள நிலையில், தற்போது, தமிழகத்தின் எதிர்ப்பை மீறி பாலாற்றின் குறுக்கே மேலும் ஒரு தடுப்பணை கட்ட 215 கோடி ஒதுக்கி அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் ஆந்திராவின் செயல் குறித்தும், பாலாற்றின் வரலாறு குறித்த செய்தித்தொகுப்பை விரிவாக பார்ப்போம்...

ஜனநாயக நாட்டில் நாம் வாழ்கிறோம் என பெருமிதம் கொண்டாலும், தமிழர்களான நாம் தங்களுக்கான உரிமைகளை கேட்கும் போது, தனித்து விடப்படுகிறோம்... குறிப்பாக தமிழகத்திற்கு தண்ணீர் விட வேண்டும் என கேட்கும் போது, கார்நாடக மாநில அரசு தண்ணீர் தர மறுக்கிறது. அதேபோல், முல்லை பெரியார் அணையில் இருந்து கேரளா மாநில அரசு தண்ணீர் வழங்க மறுக்கிறது.. அதே வரிசையில் ஆந்திரா மாநில அரசும் பாலாற்றின் குறுக்கே அணைக்கட்டி தண்ணீர் தர மறுக்கிறது...

கர்நாடக மாநிலம் சிக்பெல்லாபூர் மாவட்டத்தில் உள்ள நந்திமலையில் உற்பத்தியாகும் பாலாறு, கர்நாடகா மாநிலத்தில் 90 கிலோமீட்டரும், ஆந்திர மாநிலத்தில் 45 கிலோமீட்டரும், தமிழகத்தில் 222 கிலோமீட்டரும் பயணித்து வயலூர் அருகே வங்கக் கடலில் கலக்கிறது.  தமிழகத்தில் திருப்பத்துார், வேலுார், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் வழியாக பாயும் பாலாற்றை நம்பி, லட்சக்கணக்கான விவசாயிகள் உள்ளனர்.

இதனிடையே, ஆந்திரா மாநிலத்தில் பாலாற்றின் குறுக்கே ஏற்கனவே 22 தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ள நிலையில், கடந்த 2006 ஆம் ஆண்டு குப்பம் தொகுதி கணேசபுரம் என்ற இடத்தில் தடுப்பணை கட்டுவதற்கான முயற்சியில் அத்தொகுதியின் எம்எல்ஏ-வும், அப்போதைய முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு முயன்றார். 
அதற்கு தமிழக அரசு மற்றும் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள்,  விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அம்முயற்சியை ஆந்திர அரசு கைவிட்டதுடன், ஏற்கனவே உள்ள 22 அணைகளின் உயரத்தை உயர்த்தியது. 

இதனால் ஆந்திராவில் பெருமழை பெய்து வெள்ளம் ஏற்பட்டாலும், தமிழ்நாட்டிற்கு பாலாற்றில் தண்ணீர் வராமல் வறண்டே கிடக்கிறது. கடந்த 1892 ஆம் ஆண்டு சென்னை மாகாணம் மற்றும் மைசூர் மாகாணமாக இருந்தபோது, பாலாற்றில் தடுப்பணை கட்டக் கூடாது என ஒப்பந்தம் போடப்பட்டதை சுட்டிக்காட்டி, முன்னாள் முதலமைச்சா் புரட்சித்தலைவி அம்மா அவா்களால் கடந்த 2007 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில், வழக்கு தொடரப்பட்டது.. அந்த வழக்கு கடந்த 17 ஆண்டு காலமாக நடைபெற்று வந்த நிலையில், இது தொடர்பான வழக்கு மார்ச் மாதம் 13-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.  
 
இந்நிலையில் ஆந்திர மாநிலம் சாந்திபுரம் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி,  குப்பம் தொகுதியில் பாலாற்றின் குறுக்கே அணைகட்ட 215 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து அறிவித்தார். இந்த அறிவிப்பு தமிழக விவசாயிகள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இனியும் தமிழக அரசு தாமதிக்காமல் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளைத் துரிதப்படுத்த வேண்டும் என்றும் அதற்கான ஆதாரங்களைத் திரட்டி புதிய அணை கட்டும் ஆந்திர அரசின் முயற்சிக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். இல்லையென்றால் பாலாறு என்று ஒன்று இருந்ததற்கான சுவடே இல்லாமல் போகும் நிலை எதிர்காலத்தில் வரும் என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

தமிழக அரசு கைகட்டி வேடிக்கை பார்க்காமல், பறிபோகும் தமிழ்நாட்டின் நதிநீர் உரிமையை மீட்டெடுத்து, உணவளித்து உயிர் காக்கும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என தமிழ்நாட்டு விவசாயிகள் மற்றும் பாலாறு பாதுகாப்பு சங்கங்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

எதிர்க்கட்சியாக இருந்த போது, பாலாற்றில் தடுப்பணை கட்டுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேள்வி எழுப்பி வந்த ஸ்டாலின், தற்போது முதலமைச்சராக இருக்கும் அவர், ஆந்திர அரசு பாலாற்றில்  தொடங்கப்படும் திட்டப் பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்க  வாயை திறப்பாரா? அல்லது வழக்கம் போல் வாய்மூடி மவுனியாக இருப்பாரா என தமிழக விவசாயிகளும்,  பொதுமக்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

varient
Night
Day