எழுத்தின் அளவு: அ+ அ- அ
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் அவரது சகோதரர் நவீன்குமார் உள்ளிட்ட 4 சாட்சிகளிடம் 2வது முறையாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவில் காவலாளி அஜித் குமார் காவல்துறையினரால் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. கடந்த சனிக்கிழமையன்று திருப்புவனம் காவல் நிலையத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து அஜித்குமாரின் தம்பி நவீன் குமார் உள்ளிட்ட 4 பேரிடம் ஒருவர் பின் ஒருவராக சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர், மடப்புரம் மற்றும் திருப்புவனத்தில் அஜித்குமாரை காவலர்கள் அழைத்துச் சென்ற பகுதிகளுக்கு நேரடியாக அழைத்துச் சென்ற சிபிஐ அதிகாரிகள் அடையாளம் காட்டி நடித்து காண்பிக்க வைத்து விசாரணை மற்றும் சாட்சியம் பதிவு செய்தனர். தொடர்ந்து தனிப்படை போலீசார் அஜித்குமாரை கட்டி வைத்து தாக்கிய மடப்புரம் கோவில் பின்புறம் உள்ள கோசாலை பகுதியிலும் சிபிஐ அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்நிலையில் உயிரிழந்த அஜித்குமாருடன் விசாரணைக்காக தனிப்படை காவலர்களால் அழைத்துச் செல்லப்பட்டிருந்த நவீன் குமார், பிரவீன்குமார், வினோத்குமார், அருண்குமார் ஆகிய 4 பேர் இன்று மதுரையிலுள்ள சிபிஐ அலுவலகத்தில் 2 ஆவது முறையாக விசாரணைக்கு ஆஜரான நிலையில், மீண்டும் அவர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டது.