ஜெகதீப் தன்கர் ராஜினாமா ஏற்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கரின் ராஜினாமாவை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஏற்றுக் கொண்டதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் 6ம் தேதி நடைபெற்ற குடியரசுத்துணைத் தலைவருக்கான தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி சார்பில் ஜெகதீப் தன்கர் போட்டியிட்டார். 528 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அவர், நாட்டின் 14வது குடியரசுத்துணைத் தலைவராக தனது பணியை மேற்கொண்டு வந்தார். மாநிலங்களவை தலைவராகவும் இருந்துவந்த அவர், நேற்று இரவு தனது பதவியை ராஜினாமா செய்வதாக திடீரென குடியரசு ததைலவர் திரௌபதி முர்வுக்கு கடிதம் அனுப்பினார். உடல்நலக் குறைவு மற்றும் மருத்துவ காரணங்களால் பதவியில் இருந்து உடனடியாக விலகுவதாக அவர் தெரிவித்திருந்தார். ஜெகதீப் தன்கரின் ஐந்தாண்டு பதவிக்காலம் 2027-ம் ஆண்டு ஆகஸ்ட் 10-ம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில் அவர் இந்த திடீர்  ராஜினாமா பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஜெகதீப் தன்கரின் திடீர் ராஜினாமா புரிந்துகொள்ள முடியாத அதிர்ச்சியாக உள்ளது என்று கூறியுள்ள காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், இந்த முடிவை அவர் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். பதவியை ராஜினாமா செய்த ஜெகதீப் தன்கர் இன்றைய மாநிலங்களவை நிகழ்ச்சிகளில் பங்கேற்கவில்லை. அவருக்கு பதிலாக மாநிலங்களவைத் துணைத் தலைவர் ஹரிவன்ஷ் அவையை நடத்தினார்.

இந்நிலையில், ஜெகதீன் தன்கரின் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஏற்றுக் கொண்டுள்ளார். இந்த தகவலை உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து நாடாளுமன்ற வளாகத்தில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா, ஜெ.பி.நட்டா, ஜெய்சங்கர், சிவராஜ் சவுகான் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர்.

Night
Day