அஜித்குமார் அலைக்கழிப்பு செய்வதாக எண்ணி, உயிர் போகும் என்று தெரிந்தே அவரை தனிப்படை காவலர்கள் கடுமையாக தாக்கி உள்ளதாக திருத்தி அமைக்கப்பட்ட FIR-ல் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலைவழக்கில் 5 தனிப்படை காவலர்களான கண்ணன், ராஜா, ஆனந்த், பிரபு, சங்கர மணிகண்டன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கடந்த 28ம் தேதி திருப்புவனம் காவல் ஆய்வாளர் ரமேஷ்குமாரால் காவலர் கண்ணன் அளித்த புகாரின் கீழ் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை கடந்த 30ம் தேதி திருத்தப்பட்டு பின்னர் ஏ.டி.எஸ்.பி சுகுமாரன் மூலம் கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டது. இந்த முதல் தகவல் அறிக்கை நகல் தற்போது வெளியாகியுள்ள நிலையில் அதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
அதில் தனிப்படை காவலர்கள் 5 பேரும் நகை திருட்டு வழக்கில் அஜித்குமாரை தன்னிச்சையாக தங்கள் பொறுப்பில் வைத்திருந்ததாகவும், அஜித்குமார் தன் குற்றத்தை ஒப்புக்கொள்ள மறுத்து தங்களை அலைக்கழிப்பு செய்வதாக எண்ணி அடித்து உண்மையை வர வைக்கவேண்டும் என்ற ஆத்திரத்துடன் செயல்பட்டுள்ளனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒருவரை மூர்க்கதனமாக தாக்கினால் மரணம் ஏற்படும் என்று தெரிந்தும் 5 தனிப்படை காவலர்கள் அஜித்குமாரை தாக்கி அவருக்கு மரணத்தை ஏற்படுத்தி கொலைக்குற்றம் புரிந்துள்ளனர் என்றும் திருத்தப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கின் முதல் FIR-ன் புகார்தாரர் கண்ணன் என்பவர் வழக்கில் தொடர்புடையவர் என்பதால் அவரை நீக்கம் செய்து இவ்வழக்கில் நேரடி சாட்சியான அஜித்குமாரின் சகோதரர் நவீன்குமார் புகார்தாரரராக இடம் பெற்றுள்ளார்.
அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பாக மடப்புரத்தில் சிபிஐ அதிகாரிகள் மீண்டும் விசாரணை நடத்தியுள்ளனர். மடப்புரம் வந்த அதிகாரிகள் அஜித் தாக்கப்பட்ட இடத்தை மீண்டும் ஆய்வு செய்தனர். இது மட்டுமின்றி மடப்புரம் பஸ் நிறுத்தத்தை ஆய்வு செய்த அதிகாரிகள், மாணவர் விடுதி காவலாளி, சமையல்காரர் ஆகியோரிடமும் விசாரணை நடத்தினர். மேலும், திருப்புவனம் 4 வழிச்சாலையில் உள்ள தென்னந்தோப்பு காவலாளியிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.