எழுத்தின் அளவு: அ+ அ- அ
வருமானத்தை விட 579 சதவீதம் அதிகமாக சொத்துக்களை குவித்துள்ளதாக தொடரப்பட்ட வழக்கில் திமுக எம்பி ஆ.ராசா உள்ளிட்டோருக்கு எதிராக வரும் ஜூலை 23ஆம் தேதி குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என்று சென்னை சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
திமுகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரும், தற்போதைய நீலகிரி தொகுதி எம்.பி.யுமான ஆ.ராசா, வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவிப்பில் ஈடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டி கடந்த 2015-ம் ஆண்டு சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இது தொடர்பாக ஆ.ராசா, அவரது உறவினர் பரமேஷ்குமார், நண்பர் கிருஷ்ணமூர்த்தி என நான்கு நபர்கள் மற்றும் இரண்டு நிறுவனங்கள் மீது கடந்த 2023ஆம் ஆண்டு குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் குற்றம் சாட்டப்பட்ட காலத்தில் வருமானத்தைவிட 579 சதவீதம் அதிகமாக ஆ.ராசா சொத்துக் குவிப்பில் ஈடுபட்டதாக சிபிஐ குற்றம்சாட்டியிருந்தது.
இந்த சொத்து குவிப்பு வழக்கில் வரும் ஜூலை 23ஆம் தேதி திமுக எம்பி ஆ.ராசா உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் ஆஜராக வேண்டும் என எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அன்று குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, தனது வருமான வரி கணக்கு தாக்கல் விபரம் மற்றும் வழக்கின் சில ஆவணங்கள் வழங்க வேண்டும் என கோரி ஆ.ராசா, மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கடந்த ஆண்டு தாக்கல் செய்த மனுவை நீதிபதி என். வெங்கடவரதன் தள்ளுபடி செய்தார்.