செல்போனில் அலறும் பெண்கள்.. நம்ப வேண்டாம்..! சைபர் கிரைம் மோசடி

எழுத்தின் அளவு: அ+ அ-

புதுச்சேரியில் இளம்பெண்களின் பெற்றோர்களை மிரட்டி பணப்பறிப்பில் ஈடுபட்டுள்ளது கும்பல் ஒன்று. நூதன முறையில் பணம் பறிக்கப்பட்டது எப்படி என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

புதுச்சேரியில் வீட்டில் இருந்து வெளியே செல்லும் பெண்களை நோட்டமிட்டு, அவர்களது பெற்றோர்களை வாட்ஸ்அப் கால் மூலம் அழைக்கும் மர்ம கும்பல், ஏதேனும் காவல் நிலையத்தின் பெயரைக் குறிப்பிட்டு, அந்த காவல் நிலையத்தின் ஆய்வாளர் பேசுவதாக அறிமுகப்படுத்தி கொள்கின்றனர். பின்னர், தங்கள் மகளை வழக்கு தொடர்பாக பிடித்து வைத்துள்ளதாகவும், அந்த வழக்கில் அவரை சேர்க்காமல் இருக்க உடனடியாக தாங்கள் கூறும் வங்கிக் கணக்குக்கு 50 ஆயிரம் ரூபாயை உடனடியாக அனுப்ப வேண்டும் என கூறி மிரட்டுவதாக கூறப்படுகிறது.

பணத்தை செலுத்தாவிட்டால் வழக்கில் உங்கள் பெண்ணை சேர்த்து விடுவோம் என்று மிரட்டும் அந்த கும்பல், பெண் ஒருவர் அப்பா... அப்பா... என அலறும் சத்தத்தை செல்போன் மூலம் பெற்றோரை கேட்க வைத்து அவர்களை மேலும் அச்சுறுத்துகின்றனர். இதனால் தங்கள் மகளுக்கு ஆபத்து வந்து விடக்கூடாது என அஞ்சி, பெற்றோரும், மர்ம நபர்கள் கேட்கும் பணத்தை வங்கி கணக்கில் செலுத்தி ஏமாறுகின்றனர்.

இது தொடர்பாக இதுவரை 17 புகார்கள் புதுச்சேரி சைபர் கரைம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் ஆறு பெற்றோர்கள் மர்ம நபர்கள் மிரட்டலுக்கு பயந்து பணத்தை செலுத்தி உள்ளனர் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக சைபர் க்ரைம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அத்தகைய அழைப்புகள் அனைத்தும் வெளிநாடுகளில் இருந்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இது போன்ற அழைப்புகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்றும், அவ்வாறு வாட்ஸ்அப் கால் மூலம் ஏதேனும் அழைப்புகள் வந்தால் உடனடியாக சைபர் கிரைம் போலீசாருக்கு, 1930 என்ற கட்டணமில்லாத தொலைபேசி எண்ணில் புகார் அளிக்கலாம் என பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர். மேலும் இதுபோன்று ஒரே நாளில் 10-க்கும் மேற்பட்ட அழைப்புகள் பெண்களின் தந்தைகளுக்கு வந்துள்ளதாகவும், எனவே பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனவும் சைபர் கிரைம் போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

பெண்களின் பெற்றோரை மிரட்டி பணம் பறிக்கும் இந்த கும்பல் வெளிநாட்டில் இருந்து வாட்ஸ்அப் கால் மூலம் தொடர்பு கொள்வது கண்டறியப்பட்டுள்ள நிலையில், வீட்டில் இருந்து வெளியே செல்லும் பெண்களை எப்படி கண்டுபிடிக்கிறார்கள் என்றும், மேலும் அவர்களின் பெற்றோரின் செல்போன் எண் அந்த கும்பலுக்கு எவ்வாறு கிடைக்கிறது என்பதும் மர்மமாக உள்ளது. எனவே, இத்தகைய மோசடி கும்பலை விரைவில் கண்டுபிடித்து அவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Night
Day