சென்னை பாண்டிபஜார் - இயக்குநர் அமீர் அலுவலகத்தில் அதிரடி ரெய்டு

எழுத்தின் அளவு: அ+ அ-

திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக்கின் போதைப்பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக சென்னை தி.நகரில் உள்ள இயக்குநர் அமீர் அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டுள்ள அமலாக்கத்துறை அதிகாரிகள், முக்கிய ஆவணங்களை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள் கடத்தல் வழக்கில் திமுக பிரமுகரும், திரைப்பட தயாரிப்பாளருமான ஜாஃபர் சாதிக், டெல்லியில் கடந்த மாதம் 9ம் தேதி போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார். விசாரணையில், திரைப்பட இயக்குநர் அமீர் உள்ளிட்டோருடன் அவருக்கு நெருங்கிய தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பான விசாரணைக்காக இயக்குநர் அமீர், டெல்லியில் உள்ள மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் கடந்த 2ம் தேதி நேரில் ஆஜரானார். அவரிடம் ஜாபர் சித்திக் உடனான தொடர்பு குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே, இறைவன் மிகப்பெரியவன் படத்தை இயக்குவதற்காக ஜாபர் சாதிக்கிடம் இருந்து 1 கோடி ரூபாயை அமீர் சம்பளமாக வாங்கியதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், சென்னையில் மட்டும் ஜாபர் சாதிக் தொடர்புடைய 20க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.  தி.நகரில் உள்ள இயக்குனர் அமீருடைய இல்லம், அலுவலகத்தில் காலை முதலே அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். பல மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்று வரும் இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இதுதொடர்பாக ஆய்வு செய்ய பட்டயகணக்காளர் வரவழைக்கப்பட்டு அதிகாரிகள் திவீர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். 

இதேபோல், சென்னை சேத்துபட்டில் உள்ள அமீருக்கு சொந்தமான வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இயக்குனர் அமீரை 3 மணி நேரத்திற்கு மேலாக தனி அறையில் வைத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Night
Day