சிறுவன் மீது கொலை வெறி தாக்குதல்-உறவினர்கள் மறியல்

எழுத்தின் அளவு: அ+ அ-

நெல்லை மாவட்டம் மேலப்பாட்டம் கிராமத்தில் தன் மீது மோதுவதுபோல் வேகமாக காரில் சென்றவர்களை கேள்வி கேட்ட சிறுவனை, 10 பேர் கொண்ட கும்பல் வீடு புகுந்து தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதலில் காயமடைந்த சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், கொடூரமாக தாக்கிய கும்பலை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

நெல்லை மாவட்டம் மேலப்பாட்டம் கிராமம் பிள்ளையார் கோவில் தெருவில் வசிக்கும் சின்னத்துரை என்பவரின் 17 வயதான இரண்டாவது மகன் பாலிடெக்னிக்கில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று மதியம் வெளியே சென்று விட்டு வீட்டிற்கு நடந்து வரும்போது கொழுந்துபுரம் நோக்கி வேகமாக வந்த கார் சிறுவன் மீது மோதும்படி சென்றுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுவன், காரில் வந்தவர்களிடம் வேகமாக வந்தது குறித்து கேள்வி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் சிறுவனிடம் தகராறு செய்துவிட்டு சென்றுள்ளனர்.

இந்நிலையில் மீண்டும் மேலப்பாட்டம் வந்த 10 பேர் கொண்ட கும்பல் வீட்டில் தனியாக இருந்த சிறுவனின் தலையில் பீர் பாட்டிலை உடைத்தும், அரிவாளை கொண்டு கொடூரமாக தாக்கியுள்ளனர். மேலும், வீட்டில் இருந்த அனைத்து பொருட்களையும் நொறுக்கி விட்டு சென்றுள்ளனர். அருகில் உள்ளவர்கள் மாணவனை மீட்டு, திருநெல்வேலி அரசு மருத்து கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். இதுகுறித்து பாளையங்கோட்டை தாலுகா காவல் நிலையத்தில் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் 5 பேரை கைது செய்து மற்றவர்களை தேடி வந்தனர்.

இதனிடையே மேலப்பட்டத்தில் சிறுவன் மீது கொலைவெறி தாக்குதலில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்த வலியுறுத்தி சிறுவனின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

varient
Night
Day