சமூக விரோதிகளின் கட்டுப்பாட்டில் அரசுப் பள்ளி - 20 ஆண்டுகளாக தொடரும் அவலம்

எழுத்தின் அளவு: அ+ அ-

திருப்பூர் அருகே கட்டி முடிக்கப்பட்டு பல ஆண்டுகளாகியும் திறக்கப்படாமல் உள்ள பள்ளி கட்டடம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது. இந்த கட்டிடத்தில் போதை ஊசி, கஞ்சா சாக்லேட் புழக்கத்தால் இளைஞர்கள் சீரழிந்து வருகின்றனர். சமூக விரோதிகளால் உயிருக்கு உத்தரவாதம் இல்லாமல் வாழ்ந்து வரும் மக்களின் அவல நிலை குறித்த சிறப்பு தொகுப்பை தற்போது காணலாம்..

திருப்பூர் மாவட்டம் முதலிபாளையம் ஊராட்சியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் வீட்டுமனைகள் கட்டப்பட்டன. இந்த வீட்டு வசதி வாரியத்தில் 8 ஆயிரத்து 850 குடியிருப்புகள் உள்ளன. இதில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

முதலிபாளையம் ஊராட்சியில் உள்ள 10-வது வார்டில் மட்டும் ஒரே ஒரு பள்ளிக் கூடம் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் 7-ம் வகுப்பு வரை 350-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.

குறிப்பாக 11-வது வார்டில் பல லட்ச ரூபாய் மதிப்பில் கல்லூரிக்காக கட்டப்பட்டு, பின்னாளில் அவை, பள்ளி கட்டிடங்களாக அறிவிக்கப்பட்டும், 20 ஆண்டுகள் கழிந்த நிலையில் இதுவரை திறக்கப்படாமலேயே உள்ளது.

இந்தக் கட்டிடத்தில் உள்ள இரும்பு கதவுகள், ஜன்னல்கள் திருடப்பட்டுள்ளன. மின்சார வயர்கள் எலும்பு கூடாக காட்சியளிக்கிறது. கண்ணாடி, ஜன்னல்கள் உடைக்கப்பட்டு கட்டடம் சிதிலமடைந்து காணப்படுகிறது.

இங்கு வசிக்கக்கூடிய ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் 8-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மேல்நிலைப்பள்ளியில் சேர்ந்து படிப்பதற்கு, மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள 
படியூர், விஜயாபுரம் பகுதிகளுக்கு பேருந்தில் செல்ல வேண்டிய நிலை உள்ளது. 

இந்த பள்ளி கட்டிடங்களுக்கு மாவட்ட நிர்வாகம் நிதி ஒதுக்கீடு செய்து, சீரமைத்து பராமரிப்பு செய்து நடவடிக்கை மேற்கொண்டால் இந்த பகுதியில் வசிக்கும் பள்ளி குழந்தைகள், மேல் நிலை பள்ளி படிப்பை தொடர எளிதாக இருக்கும் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

இந்த பள்ளி கட்டடங்கள் ஆண்டுக்கணக்கில் பயன்படுத்தப்படாமல் இருப்பதால், சமூக விரோதிகள் சிலர் போதை ஊசிகள், கஞ்சா சாக்லேட் ஆகியவற்றை இந்த கட்டடத்தில் பயன்படுத்தி வருகின்றனர்.

இதனால் அருகில் வசிக்கக்கூடிய மக்கள் அச்சத்துடன் நடமாடுவதாகவும், இப்பகுதியில் கட்டப்பட்டுள்ள ஊத்துக்குளி காவல் நிலையத்திற்கு உட்பட்ட மர காவல் நிலையம் பூட்டியே வைக்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சமூக விரோதிகளின் அராஜகத்தை தட்டி கேட்டால், தங்களை மிரட்டுவதாகவும், தங்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளதாகவும், புறக்காவல் நிலையத்தை திறந்து காவலர்கள் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டால், சமூக விரோதிகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த முடியும் என்கின்றனர் அப்பகுதியில் வசிக்ககூடிய பொதுமக்கள்.

பள்ளிக்கட்டிடங்கள் கட்டுவதற்கு லட்சக்கணக்கில் மக்களின் வரிப்பணத்தை வீணடித்து ஆண்டுக்கணக்கில் அதனை திறக்கப்படாமல் பூட்டி வைத்திருப்பது அதிர்ச்சி அளிப்பதாகவும், பள்ளி கட்டிடங்களை புணரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து, புற காவல் நிலையம் திறக்கப்பட வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் ஒரே கோரிக்கையாக உள்ளது.

Night
Day