எழுத்தின் அளவு: அ+ அ- அ
சென்னையில் குழந்தைகளை கடத்தி விற்பனை செய்த விவகாரத்தில் தாய் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்த நிலையில் தலைமறைவான 2 பெண்களை போலீசார் தேடி வருகினறனர்.
சென்னையில் குழந்தைகளை கடத்தி விற்கும் கும்பல் ஒன்று, குழந்தைகளை விற்பனை செய்வதற்கு பேரம் பேசும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆண் குழந்தைகளை 15 லட்சம் ரூபாய்க்கும், பெண் குழந்தைகளை 10 லட்சம் ரூபாய்க்கும் விலை பேசுவது போன்ற ஆடியோ வெளியானது.
இதுதொடர்பாக புழல் பகுதியை சேர்ந்த திவ்யா என்ற பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அவர் அளித்த தகவலின் அடிப்படையில் விற்பனைக்காக கடத்தப்பட்ட 2 குழந்தைகளை போலீசார் மீட்டனர். அவர்களை காப்பகத்தில் ஒப்படைத்தனர். மீட்கப்பட்ட இரண்டு குழந்தைகளையும் சென்னை மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பெயரில் போலீசார் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
குழந்தை கடத்தல் விவகாரத்தில் இடைத்தரகர்களான தீபா, தாய் ரதிதேவி உள்பட 3 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே இந்த சம்பவத்தில் தொடர்புடைய தலைமறைவாக உள்ள அனுராதா, பிரேமா ஆகிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட புழல் பகுதியை சேர்ந்த தீபா, பாஜகவின் அடிப்படை உறுப்பினர் மற்றும் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக பாரதிய ஜனதா கட்சி தலைமை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.