எழுத்தின் அளவு: அ+ அ- அ
சென்னை அண்ணாநகரில் முன்விரோதம் காரணமாக கல்லூரி மாணவர் கார் ஏற்றி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய திமுக நிர்வாகியின் பேரன் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை அண்ணாநகர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த கல்லூரி மாணவர் நித்தின்சாய் என்பவர் கடந்த 2 தினங்களுக்கு முன் சொகுசு கார் மோதியதில் உயிரிழந்தார். முதலில் விபத்து காரணமாக நித்தின் சாய் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், இது திட்டமிட்ட கொலை எனவும், இதற்கு திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் கே.கே.நகர் தனசேகரனின் பேரன் சந்துரு தான் காரணம் எனவும் கூறி உயிரிழந்த மாணவரின் பெற்றோர் மற்றும் நண்பர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து, 5 பேர் மீது கொலை வழக்கு உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். இச்சம்பவம் தொடர்பாக சுதன், பிரணவ் ஆகியோர் நேற்று கைதான நிலையில், தலைமைறைவாக இருந்த திமுக நிர்வாகியின் பேரன் சந்துரு, ஆரோன் மற்றும் எட்வின் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதனையடுத்து, கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நித்தின் சாய் உடலை பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர்.