எழுத்தின் அளவு: அ+ அ- அ
சென்னையை அடுத்த பூந்தமல்லி நசரத்பேட்டையில் பெண்ணிடம் கத்தி முனையில் செயின் பறித்ததோடு பாலியல் அத்துமீறலிலும் ஈடுபட்ட அஜய்குமார் என்பவர் திமுக பிரமுகர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லி அடுத்த நசரத்பேட்டையில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் முகவரி கேட்பது போல் சென்று, அந்தப் பெண்ணை வீட்டுக்குள் இழுத்துச் சென்ற அஜய்குமார், கத்தி முனையில் அந்த பெண் அணிந்திருந்த நகைகளை பறித்துள்ளார். தனது கைரேகைகள் பதியாமல் இருக்க அந்த பெண்ணை வைத்தே பீரோவில் இருந்த நகைகளை கொள்ளையடித்துள்ளார். மேலும் அப்பெண்ணை கட்டிப் போட்டு பாலியல் வன்கொடுமை செய்து அதனை வீடியோவாக பதிவு செய்து கொண்டு அஜய்குமார் தலைமறைவானார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்ட நசரத்பேட்டை போலீசார் தொப்பி மற்றும் மாஸ்க் அணிந்து கொண்டு அஜய்குமார் சென்ற ஆட்டோ மற்றும் அவர் பயன்படுத்திய இருசக்கர வாகனம் ஆகியவற்றைக் கொண்டு தேடி வந்தனர். இந்தநிலையில், விஜயவாடாவில் இருந்து கோயம்புத்தூர் வந்த அஜய்குமாரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து தாலிச் செயின் உட்பட 11 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் இளநிலை பட்டதாரியான அஜய்குமார், கடனை செலுத்துவதற்காக திரைப்பட பாணியில் தடயம் தெரியாமல் கொள்ளையடித்து வந்தது தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட அஜய்குமார் சென்னை ராயபுரம் முத்தமிழ் நகரைச் சேர்ந்த திமுக வட்டப் பொறுப்பில் இருக்கும் பிரவீன் குமாரின் மகன் என்பதும், அஜய்குமாரும் திமுக பிரமுகர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.